×
Saravana Stores

ருதுராஜ் 69, ஷிவம் துபே 66* சூப்பர் கிங்ஸ் 206 ரன் குவிப்பு

மும்பை; மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் – ஷிவம் துபே ஜோடியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே, ரச்சின் ரவிந்த்ரா களமிறங்கினர். ரகானே 5 ரன் எடுத்து கோட்ஸீ வேகத்தில் ஹர்திக் வசம் பிடிபட்டார்.

அடுத்து ரச்சின் – ருதுராஜ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர்.ரச்சின் 21 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கோபால் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷிவம் துபே, ருதுராஜுடன் சேர்ந்து அதிரடியில் இறங்க சென்னை அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ருதுராஜ் 33 பந்திலும், துபே 28 பந்திலும் அரை சதம் அடித்தனர்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது.ருதுராஜ் 69 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். டேரில் மிட்செல் 17 ரன் எடுத்து ஹர்திக் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே உள்ளே வந்த எம்.எஸ்.தோனி ஹாட்ரிக் சிக்சர் விளாச, சென்னை 200 ரன்னை கடந்தது.

சிஎஸ்கே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. துபே 66 ரன் (38 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 20 ரன்னுடன் (4 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ஹர்திக் 2, கோட்ஸீ, கோபால்தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

The post ருதுராஜ் 69, ஷிவம் துபே 66* சூப்பர் கிங்ஸ் 206 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ruduraj ,Sivam Dubey ,Super Kings ,MUMBAI ,IPL ,INDIANS ,CHENNAI SUPER KINGS ,RUDURAJ KEIKWAD ,SHIVAM DUBE PAIR ,Vancade Stadium ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…