×

தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 காலி பணியிடங்கள்: விஆர்எஸ்சில் செல்லும் தமிழர்கள், இந்தி ஆதிக்கம் என ஊழியர்கள் குமுறல்


தெற்கு ரயில்வேயில் இந்தியின் ஆதிக்கத்தால் விருப்ப ஒய்வில் பணியாளர்கள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே உலகின் 2வது பெரிய ரயில்வே நிறுவனம். ஒரு காலத்தில் 14லட்சம் பேர் ரயில்வேயில் பணி புரிந்தனர். அதன் 18 மண்டலங்களில் ஒன்றான தெற்கு ரயில்வேயில் சுமார் 1.25லட்சம் பேர் வேலை செய்தனர். அதெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறி விட்டன.
முன்பெல்லாம் தெற்கு ரயில்வேக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய ரயில்வே தேர்வு வாரியம்(ஆர்ஆர்பி) சென்னை, திருவனந்தபுரத்தில் இயங்கியது.

அந்த வாரியம் காலி பணியிடங்களை அறிவித்து அதற்கான தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்யும். தேர்வும் தெற்கு ரயில்வே செயல்படும் பகுதிகளில் மட்டும் நடந்தன. இப்போது வாரியங்கள் பேருக்கு செயல்படுகின்றன. பணியிடங்கள் ஒன்றியத்தின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றன. அதன் பிறகு படிப்படியாக வட இந்தியர்களுக்கு மட்டும் ரயில்வேயில் வேலை என்றாகி விட்டது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென் இந்தியா முழுவதும் இந்திக்காரர்கள்தான் பணியில் இருக்கின்றனர்.

அதற்கு நகரங்கள் மட்டுமல்ல, கடைக்கோடியில் உள்ள ரயில்நிலையங்களும் தப்பவில்லை. அதனால் உள்ளூர் பயணிகள் ரயில்வேயில் இருந்து இந்தி தெரியாமல் உதவி பெறுவது கடினமாகி விட்டது. பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றாலும் ‘ஏக் டிக்கெட் கிவ்… தோ டிக்கெட் கிவ்’ என்று இந்தி, இங்கிலீஷ் கலந்து பேச வேண்டிய நிலைமை. ‘எந்த ரயில் எந்த நடைமேடையில் எத்தனை மணிக்கு வரும்’ என்பதை கேட்பது என்றால் தமிழ்நாடு மக்கள் படும் சிரமத்துக்கு அளவில்லை.

ரயில்வேயில் தமிழருக்கு இனி இடமில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரயில்வேயில் எஞ்சியிருக்கும் தமிழ்நாட்டுக்காரர்களும் ரயில்வேயில் இருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இந்திக்காரர்களிடம் வேலை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர். மீறி கேட்டால், உடனே டெல்லிக்கு இந்தியில் புகார் பறக்கும். அதன் பிறகு தமிழ்நாட்டு அதிகாரிக்குதான் பிரச்னை. அதே நிலைமைதான் இந்தி பேசும் அதிகாரிகளிடம் வேலை செய்வதும். அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுகின்றனர்.

எல்லாவற்றையும் இந்தியில் எழுதி தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இல்லாவிட்டால் ‘மெமோ, டிரான்ஸ்பர்’ என அவர்கள் சந்திக்கும் பிரச்னை. ரயில்வேயில் பணியாற்றும் தமிழ்நாட்டுக்காரர், ‘ரயில்வே அலுவலகத்துக்குள் போனாலே ஏதோ வட இந்தியாவுக்குள் போவது போல் இருக்கிறது. எல்லாம் இந்தி மயம்தான். தமிழில் பேசினால் மதிக்க மாட்டேன்கிறார்கள். அதனால் நமது ஊர்காரர்கள் எல்லாம் தனித்தீவில் சிக்கியது போல் தவிக்கிறோம்.

இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் நாடு அதிகாரிகளிடம் உதவி கேட்டுப் போனால் இந்திக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். அதனால் கடந்த 10 ஆண்டுகளாக விருப்ப ஓய்வில்(விஆர்எஸ்) செல்லும் உள்ளூர்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்படியே போனால் ரயில்வேயில் தமிழ்நாட்டுக்காரர்கள் ஏன் தென் இந்தியர்கள் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
தெற்கு ரயில்வேயில் 2013ல் 94,200 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை , 2018ல் 88,761 ஆகவும், 2019ல் 84,865ஆகவும், 2021ல் 82,496 ஆகவும் குறைந்து, 2023ல் 75,859 ஆக வெகுவாக குறைந்துள்ளது.

இது 2024ல் 72,000 ஆக குறைந்திருக்கும் என கூறப்படுகிறது. ஓய்வு பெறுபவர்கள் ஒருபக்கம் என்றால், விருப்ப ஓய்வில் செல்பவர்களின் எண்ணிக்கை தனி. ஆண்டுக்கு 100, 150 பேர் வரை விருப்ப ஓய்வில் செல்கிறார்கள். சில மாதங்களில் சுமார் 55பேர் கூட விருப்ப ஓய்வில் சென்ற சோகமான நிகழ்வு இருக்கிறது.  எங்கும் இந்தி

* சென்னை சென்ட்ரல், எழும்பூர் என தமிழ்நாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் அறிவிப்புகள் முதலில் இந்தி, அடுத்து ஆங்கிலம், கடைசியாக தமிழில் சொல்லப்படுகின்றன. ரயில் வருகை, புறப்பாடு விவரங்களை சொல்லும் மின்னணு பலகைகளிலும் இந்தியில்தான் முதலில் அறிவிப்பு ஒளிர்கிறது.

* ரயில்வே சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளிலும் இந்திக்குதான் முதலிடம். ரயில்வே ஊழியர்கள் அணியும் அடையாள அட்டை, அதை இணைக்கும் கயிறு ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மட்டும்தான்.

* பயணிகளிடம் புழங்கும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர்களின் சட்டையில் உள்ள பெயர் வில்லைகளிலும் இந்தி, ஆங்கிலம் இருக்கிறது. சிலர் இந்தியில் மட்டுமே அணிகின்றனர்.

* வந்தேபாரத், தேஜாஸ், அந்தியோதயா, உதயன் என அறிமுகமான ரயில்களுக்கும் இந்தியில்தான் பெயர். இதற்கு ரயில் பெட்டி கூட விலக்கல்ல. சாதாரண ரயில் பெட்டிகளுக்கு தீனதயாள் உபாத்யா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

* ரயில்வே தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆள் எடுக்க அந்த தொழிற்சாலையில் இருந்து 80கிமீ சுற்றளவிற்குள் வசிப்பவர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை ரயில்வே காற்றில் பறக்கவிட்டுவிட்டது. ஐசிஎப் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சாலைகளிலும் இந்த நிலைமைதான். அதிலும் தனியார் மயம் என்ற பெயரிலும் இந்திக்காரர்களை தான் வேலைக்கு வைக்கின்றனர்.

விருப்ப ஓய்வு பெற்று செல்லும் நபர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை கூட பணிக்கு எடுக்காமல் தெற்கு ரயில்வே காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் ரயில் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகளவில் இருக்கிறது. 8 மணி நேர வேலை, 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, ஒப்பந்த முறையில் வடமாநில நபர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதே நிலைமை தான் ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலும். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பலமுறை குரல் கொடுத்தும் ஒன்றிய அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் முழுக்க முழுக்க ஒன்றிய அரசு தான் என தெற்கு ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் தெரிவிக்கையில், தெற்கு ரயில்வேயில் காலி பணியிடங்கள் எண்ணிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்துள்ளோம்.

இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வேயில் பல சலுகைகள் குறைக்கப்பட்ட பின்னர், மக்களுக்கு ரயில்வே மீது வெறுப்பு வந்துவிட்டது. சில பேர் மருத்துவ காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெறுகின்றனர், பலர் மொழி பிரச்னை காரணமாக ஓய்வு பெறுகின்றனர். இதில் மொழி பிரச்னை என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பலமுறை தொழிற்சங்கங்கள் வாயிலாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

 

The post தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 காலி பணியிடங்கள்: விஆர்எஸ்சில் செல்லும் தமிழர்கள், இந்தி ஆதிக்கம் என ஊழியர்கள் குமுறல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,VRS ,Indian Railways ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...