×

அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்கிறார்கள்; மோடியும், பாஜவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு: அவிநாசி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

சென்னை: அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் பாஜவினர் செய்து வருகின்றனர். மோடியும், பாஜவும் வீட்டிக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என்று அவிநாசி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசி உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார். டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பிஜேபியும் க்ளோஸ்!”. சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரசாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும். அது மட்டுமா, இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் தமிழ்நாட்டு வரலாறும் தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும், சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பாஜவுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது. மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பாஜவுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான். மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்.

பத்தாண்டுகாலமாக பா.ஜ. ஆட்சியைப் பார்த்துவிட்டோம். நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது. பெட்ரோல், டீசல், காஸ் – சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.வின் டிஎன்ஏவிலேயே ஊறியது. நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள். இதுதான் பாஜ மக்களை மதிக்கும் இலட்சணம். இதுதான் பாஜ பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு. மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களை நடத்த முடியும். பாஜ. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது. இப்படி நாட்டைப் பாழ்படுத்தி அதலபாதாளத்தில் தள்ளிய பாஜவையும் மோடியையும் வீட்டிற்கு அனுப்ப இந்திய மக்களின் ஆதரவுடன் உருவாகி இருப்பதுதான் இந்தியா கூட்டணி. மொழியும், மதமும் வேறு வேறாக இருந்தாலும் இந்திய நாடு நமக்கானது என்ற எண்ணத்தை எல்லோரும் பெறுவதற்கு ஒரு நம்பிக்கையான ஆட்சிமுறையை வைத்துக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

இப்படி நாம் காப்பாற்றிய இந்தியாவை, சிதைக்கப் பார்க்கிறார் மோடி. ஒற்றுமைச் சிந்தனை குலைந்துவிட்டால், மிக மோசமான ஆபத்துகள் நம்மைச்சூழும். அதனால்தான் இந்தியா முழுமைக்கும், இருக்கும் ஜனநாயக சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். பாசிசத்தை வீழ்த்த ஒன்று சேர்ந்திருக் கிறோம். மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் மோடி ஆட்சியில் ‘‘ஏல அறிவிப்பு” நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்துவிட்டது. மோடியை நம்பி ஏமாந்துவிட்டதாக, பல தொழிலதிபர்கள் வேதனையோடு புலம்புகிறார்கள்.

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3வது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு. நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14வது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன். இப்போது 3வது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதுதான் நம்முடைய இலக்கு.

தமிழ்நாடு அரசால் இதுவரை 6 புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குகிற பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் வட்டாரத் தொழில் மையங்கள் நிறுவப்பட இருக்கிறது. சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் நகரங்களிலும் – வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவுகிற பணிகள் நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணமானது சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு வளரும். தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள். ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படி நாம் தொடர்ந்து உழைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கம் நாட்டையே பாழ்படுத்திய பாஜவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர அவருக்கும் மோடி – அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பா.ஜ.க.வை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது. ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பா.ஜ.க.தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பா.ஜ.க.தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பா.ஜ.க.தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பா.ஜ.க.தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜதான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பா.ஜ.க.தான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பாஜதான்.

இப்படி டிவி சீரியலில் திடீர் திடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி – சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பாஜ தலைமை. உறுதியோடு சொல்கிறேன், இந்தத் தேர்தலில் நேரடி பாஜவும் மண்ணைக் கவ்வும்! பாஜவின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள். தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள். கொடி காத்த குமரன் பிறந்த ஊர் மக்களாகிய உங்களை நாடு காக்க அழைக்கிறேன். உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும். உங்கள் வாக்கு இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே!நாற்பதும் நமதே! நாடும் நமதே! இவ்வாறு அவர் உரையாற்றினார்.

The post அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்கிறார்கள்; மோடியும், பாஜவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு: அவிநாசி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Chief Minister ,M. K. Stalin ,Avinasi public meeting ,CHENNAI ,M.K.Stalin ,Avinasi ,Lok Sabha ,India Alliance ,Avinasi, Tirupur district ,
× RELATED ஒன்றியத்தில் பாஜக கூட்டணி ஆட்சி...