×

தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம்; தமிழ்நாட்டில் 1.70 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

* வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடத்தில் செல்ல ஏற்பாடு
* பதற்றமான பூத்களில் மத்திய போலீஸ் படை

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தேர்தலில் 1.7 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடங்களில் போலீசார் விரைந்து செல்ல முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வருகிற 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சட்டீஸ்கர் 1, மத்தியபிரதேசம் 6, மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம், நாகாலாந்து தலா ஒரு தொகுதி, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 3, அந்தமான் நிக்கோபர், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகிய தேசிய தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தலைவர்களுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதாக தமிழக ேதர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதும் அளவுக்கு தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. பொதுக்கூட்டம் மட்டுமின்றி, வாகன பேரணி, பேரணி, தெருமுனைக் கூட்டங்கள் என்று பல்வேறு வகையான பிரசாரங்கள் அமைதியான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. பிரசாரம் முடிய 3 நாட்களே உள்ளன. புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் சேர்ந்து 717 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 712 கண்காணிப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பறக்கும் படையினர் பண விநியோகம், முறைகேடு குறித்து சோதனை நடத்துவார்கள். கண்காணிப்பு குழுவினர் வேட்பாளரின் செலவு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதை தொடர்ந்து சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலுக்கு 1.70 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 190 மத்திய பாதுகாப்பு படையினரும் பயன்படுத்தப்பட உள்ளனர். குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர். 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் 18ம் தேதியே தேர்தல் நடைபெறும் இடங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளன. தேர்தல் நாள் என்று ஒரு பூத்துக்கு ஒரு போலீசார் மற்றும் ஊர்க்காவல்படை அல்லது முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரில் ஒருவர் என 2 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஒரு கட்டிடத்தில் 6 பூத்துகள் இருந்தால் 3 போலீசார், போலீசார் அல்லாத 3 பேர் என 6 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். ஒரு கட்டிடத்தில் 6 பூத்துக்கு மேல் இருந்தால் 6 மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதை தவிர பூத்துகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மண்டலத்திலும் 10 முதல் 12 போலீசார் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை தவிர ஒரு எஸ்.ஐ. தலைமையில் ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையும் சிறப்பு படை தயாராக இருக்கும். இவர்களை தவிர, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பிக்கள், கூடுதல் எஸ்பிக்கள் தலைமையிலும் சிறப்பு படையினர் தயாராக இருப்பார்கள். 2 மணி நேரத்துக்குள் 1 தேர்தல் நடைபெறும் கட்டிடத்துக்கு 6 அல்லது 7 முறை இந்த படையினர் ரோந்து பணியில் வந்து செல்லும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒரு பூத்தில் பிரச்னை என்றால் 5 நிமிடத்துக்குள் ரோந்து படையினர் செல்வார்கள். அடுத்த 10 முதல் 12 நிமிடத்துக்குள் உயர் அதிகாரிகள் படையுடன் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் படையினரிடமும் வாக்கி டாக்கி, கேமராக்கள் இருக்கும். தமிழகத்தில் 8050 பூத்துகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. 181 பூத்துகள் அதிக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், பதற்றமான பூத்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கேமராக்களை கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பார்கள். பிரச்ைன ஏற்பட்டால் அவர்களும் உடனடியாக உரிய உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். அதை தவிர தேர்தல் நாள் அன்று தேர்தல் பணிகளை பார்வையிட ஒன்றிய அரசு அதிகாரிகளை கொண்ட மைக்ரோ அப்சர்வர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்படும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனால் தேர்தல் நாள் அன்று அமைதியான முறையில் தேர்தலை நடத்த போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

The post தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம்; தமிழ்நாட்டில் 1.70 லட்சம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Election Commission ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...