×

பாஜ மாவட்ட செயலாளர் வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல்: ஈரோடு அதிமுக வேட்பாளருக்கு சொந்தமானது என தகவல்

சென்னை: பாஜ மாவட்ட செயலாளர் வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் ஈரோடு அதிமுக வேட்பாளருக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பாஜ உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ஜவகர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி பணம் வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த பீரோ மற்றும் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அதில் மொத்தம் ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 இருந்தது. ஆனால் அதற்காக உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறையிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஒப்படைத்தார். பாஜ நிர்வாகி ஜவகரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம்‌ என்பது தெரியவந்துள்ளது. அதிமுக வேட்பாளர் அசோக்குமார் பாஜவில் இருந்தபோது ஜவகருடன் நட்பாக இருந்துள்ளார். நெருங்கிய நண்பர் என்பதால் ஜவகர் இந்த பணத்தை வீட்டில் வைத்திருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய இருந்த நிலையில் தற்போது அந்த பணம் பிடிபட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதன்பேரில் அடுத்த கட்ட விசாரணை நடக்கிறது.

* அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ஐடி ரெய்டு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் இல்லம் அமைந்துள்ளது. அவரது இல்லத்தில் இயங்கி வரும் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிபவர் தியாகராஜன். காரியாபட்டி – மல்லாங்கிணறு சாலையில் உள்ள தியாகராஜன் வீட்டில் நேற்று பகல் 1 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் எந்தவித ஆவணமும் கிடைக்காததால், வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதேபோல், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி போட்டியிடுகிறார். இவரது வீடு கந்தப்ப முதலியார் வீதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள அவரது சகோதரி ஜெயக்குமாரி வீடு உள்ளிட்ட உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கோழிப்பாக்கத்தில் உள்ள வைத்திலிங்கத்தின் சம்பந்தி இல்லத்திலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* தொழிலதிபர் வீட்டில் ரூ.80 லட்சம் சிக்கியது
நாமக்கல் இபி காலனியில் வசித்து வரும் நிதி நிறுவன அதிபர் செல்லப்பன்(62) என்பவரின் வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று மதியம் பறக்கும் படையினர் தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படையினர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அவரது வீட்டில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படையினர் இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு வந்து, வீட்டில் போலீசார் துணையுடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நாமக்கல் காந்தி நகரில், ஒரு நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.4.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது மேலும் ஒரு நிதி நிறுவன அதிபர் வீட்டில், ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நாமக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜ மாவட்ட செயலாளர் வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல்: ஈரோடு அதிமுக வேட்பாளருக்கு சொந்தமானது என தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP district ,Erode ,AIADMK ,Chennai ,BJP Local Government Development Division ,Tirupur ,District ,Vellakoil Tithambalayam ,Parrapumedu ,Dinakaran ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை