×

கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் மந்திரி சபையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் ஐசக். அப்போது கேரள உள்கட்டமைப்பு நிதி வாரியத்தின் மூலம் பல ஆயிரம் கோடிக்கு பத்திரங்கள் மூலம் நிதி பெறப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தாமஸ் ஐசக் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பத்தனம் திட்டா தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பத்திர மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தாமஸ் ஐசக்குக்கு பலமுறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக தாமஸ் ஐசக்தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தற்போது தேர்தலில் போட்டியிடுவதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், ‘தேர்தல் முடியும் வரை தாமஸ் ஐசக்கிடம் விசாரணை நடத்த வேண்டாம்’ என்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சை அணுகியது. அந்த மனுவில், ‘தாமஸ் ஐசக் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் வழக்கை நடத்த முடியவில்லை. எனவே அவரை விசாரணைக்கு உடனடியாக ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் உங்களுக்கு ஏன் இந்த அவசரம்? தேர்தல் முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்திக் கொள்ளலாமே’ என்று டிவிஷன் பெஞ்ச் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

The post கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : ICOURT ,DEPARTMENT ,KERALA ,MAJI ,MINISTER ,Thiruvananthapuram ,Thomas Isaac ,Pinarayi Vijayan ,Kerala Infrastructure Finance Board ,ICOURD ,
× RELATED சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை...