×

நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மோடி – பில்கேட்ஸ் சந்திப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயற்சி: தலைமை தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

புதுடெல்லி: ஏபிரதமர் மோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிரசார் பாரதி எடுத்த முயற்சிக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 29ம் தேதி சந்தித்துக் கொண்டனர். இருவரும் கிட்டத்தட்ட 45 நிமிடம் பல்வேறு விசயங்கள் குறித்து பேசினர். இருவரின் சந்திப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஒன்றிய அரசின் பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அமைப்பு பிரசார்பாரதி) ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மேற்கண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்ப தலைமை தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி கோரியுள்ளது. அதற்காக இ-மெயில் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் எவ்வித அதிகாரப்பூர்வ உத்தரவும் வழங்கவில்லை. இருப்பினும், மேற்கண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி கோரி பிரசார் பாரதி அனுப்பிய மின்னஞ்சலுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது நிகழ்ச்சியை ஒளிபரப்புவது பொருத்தமற்றது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த எச்சரிக்கையால், மோடி – பில்கேட்ஸ் சந்திப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நடவடிக்கையை பிரசார் பாரதி கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் பிசார்பாரதி அமைப்பானது, ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை பலமுறை எடுத்து வந்ததால், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் ​​பிரசார் பாரதிக்கு சொந்தமான தூர்தர்ஷன், கேரளாவை பற்றி வெறுப்பை பரப்பும் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தை ஒளிபரப்பியதற்காக சர்ச்சையில் சிக்கியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மோடி – பில்கேட்ஸ் சந்திப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயற்சி: தலைமை தேர்தல் ஆணையம் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Pilkates ,Electoral ,Commission ,NEW DELHI ,ELECTION COMMISSION ,PRASHAR BHARATI ,MICROSOFT ,Pillgates ,Chief Electoral Commission ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...