×

எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் : வெளியுறவுத் துறை அமைச்சகம்!!

டெல்லி : இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்து இருக்கும் நிலையில், 2 நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் தரப்பில் 2,500 பேரும் காசா பகுதியைச் சேர்ந்த 33,000 பேரும் பலியாகினர். போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சிரியா தலைநகர் டமாஸில் உள்ள ஈரான் தூதரக வளாகம் மீது கடந்த 1ம் தேதி குண்டு வீசி தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 3 முக்கிய தளபதிகள் உட்பட 7 பேரும் சிரியாவைச் சேர்ந்த 4 பேரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் என்று குற்றம் சாட்டிய ஈரான், அந்நாட்டிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது.

ஆனால் குற்றச்சாட்டை மறுத்த இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், 100 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் மிகப்பெரியதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால், இஸ்ரேல், ஈரான் ஆகிய 2 நாடுகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது. தற்போது ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

The post எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் : வெளியுறவுத் துறை அமைச்சகம்!! appeared first on Dinakaran.

Tags : Indians ,Israel ,Iran ,Ministry of Foreign Affairs ,Delhi ,United States ,Hamas ,Gaza ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்