×

தேர்தல் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக கட்சி கொடிகள் :ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!!

ஈரோடு : தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜயகுமார் சைக்கிள் சின்னத்தில் போட்டிடுகிறார். இந்த நிலையில் அவரை ஆதரித்து காங்கேயம் ரவுண்டானா பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஜி.கே.வாசன் வருகையையொட்டி, தேர்தல் விதிமுறைகளை மீறி காங்கேயம் நகர் முழுவதும் உள்ள சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சி கொடிகள் கட்டப்பட்டன. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், கொடிகளை பொது வெளியில் கட்டியது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார், தமாகா நிர்வாகிகள் தர்மராஜ், சுரேஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post தேர்தல் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக கட்சி கொடிகள் :ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamaka ,BMC party ,Erode ,Vijayakumar ,Lok Sabha ,Tamil Nadu ,Puducherry ,BMC ,Erodu ,Dinakaran ,
× RELATED சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு...