×

நாளை மறுநாள் நள்ளிரவு முதல் தமிழக கடலில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் துவக்கம்: சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கரை நிறுத்தப்படும்

 


ராமேஸ்வரம்: தமிழக கடல் பகுதிகளில் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளது. இதனையொட்டி சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கரை நிறுத்தப்படும். கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. இக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் எவ்வித தடையும் இன்றி மீன்பிடிக்க செல்லலாம். இந்த தடைக்காலம் கடலோர மாநிலங்களில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக கடல் பகுதியில் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதம் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடையால் தூத்துக்குடி முதல் சென்னை வரையுள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்படும். பாக்ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம் உட்பட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை மாவட்ட மீனவர்கள் அதிகளவில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினரின் கடுமையான தாக்குதல், கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரமடைந்து உள்ளதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் குறைந்த மீன்களுடன் கரை திரும்புகின்றனர்.

கடலில் குறைந்தளவு மீன்வரத்து என்பதாலும், இலங்கை கடற்படையினரிடம் சிக்கி பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதாலும், ராமேஸ்வரம் மீனவர்கள் பலரும் தங்களது படகுகளை முன்னதாகவே கரை நிறுத்தி விட்டனர். சிறிய படகுகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதனால் மீன்பிடித்துறைமுகம் பரபரப்பின்றி காணப்படுகிறது. மேலும், ராமேஸ்வரம் துறைமுகத்தில் கரை நிறுத்தம் செய்துள்ள படகுகளில் உள்ள மீன்பிடி உபகரணங்களை இன்று முதல் மீனவர்கள் கரைக்கு இறக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் துவங்க உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 1,500 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்படும். தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்படும். படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பார்கள். மீன் அள்ளும் கூலிகள், சிறு வியாபாரிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகளும் வேலை இழக்கும் சூழ்நிலை உண்டாகும். வேறு மாற்றுத்தொழில் இல்லாமல் சுமார் இரண்டு லட்சம் குடும்பங்கள் அன்றாட வருவாய் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாவார்கள்.

The post நாளை மறுநாள் நள்ளிரவு முதல் தமிழக கடலில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் துவக்கம்: சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கரை நிறுத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Bay of Bengal ,Arabian Sea ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...