×

ரம்ஜான் நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்.. நாஞ்சிக்கோட்டையில் இஸ்லாமிய குடும்பத்திற்கு சீர் வரிசை வழங்கிய இந்து மக்கள்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே குடும்பத் தலைவரை இழந்ததால் ஏழ்மை நிலைக்கு சென்று ரம்ஜான் கொண்டாட முடியாமல் தவித்த குடும்பத்திற்கு இஸ்லாமியர் அல்லாத கிராம மக்கள் திரண்டு சென்று பண்டிகை சீர்வரிசை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள சேகர் காலனி என்ற பகுதியில் வசித்து வந்த அலாவுதீன் என்பவர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இறந்ததால் அவரது குடும்பம் ஏழ்மையான சூழலுக்கு தள்ளப்பட்டது.

அவரது வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த அந்த குடும்ப உறுப்பினர்கள் ரம்ஜான் பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் தவித்து நின்றனர். இதையறித்த சேகர் காலனியில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத மக்கள் அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான புத்தாடைகள், அரிசி, பருப்பு, பலகாரங்கள் ஆகியவற்றை வாங்கினர். பண்டிகை நாளில் கூட்டமாக சென்று அலாவுதீனின் குடும்பத்தினருக்கு சீர்வரிசையாக வழங்கி, தாங்களும் இணைந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

அண்மைக்காலமாக நாட்டில் மத நல்லிணக்கம் வேகமாக அருகி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலைகொள்ள தொடங்கியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் அரங்கேறும் இதுபோன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் இந்த மண் எப்போதும் சமத்துவத்திற்கான மண் என்பதை பறைசாற்றி கொண்டே இருப்பதாக நாஞ்சிக்கோட்டை சமூகத்தை கேள்விப்பட்டவர்கள் பேர்உவகையுடன் குறிப்பிட்டு இருக்கின்றனர். வறுமையில் வாடிய குடும்பத்திற்கு மத மாற்றங்களை புறந்தள்ளி மனிதநேயத்துடன் சென்று மொத்த கிராமமே உதவிய சம்பவம் தஞ்சாவூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post ரம்ஜான் நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்.. நாஞ்சிக்கோட்டையில் இஸ்லாமிய குடும்பத்திற்கு சீர் வரிசை வழங்கிய இந்து மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Nanchikottai ,Thanjavur ,Nanchikot ,Thanjavur district ,
× RELATED ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி...