×

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. ஏப்.21ல் திருக்கல்யாணம், ஏப்.23ல் வைகையில் அழகர் இறங்கும் வைபவம்

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.23ம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கோவில் பட்டர்கள் கொடி ஏற்றினர். கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோயிலுக்குள் வாஸ்து சாந்தி (நிலத்தேவா் வழிபாடு) நடைபெற்றது.இதில் கோயில் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.20ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.

அன்றிரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஏப்.22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்.23ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து அழகர் கோயில் திருவிழா 19ம் தேதி தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்.22ம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.23ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

ஏப்.24ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், ஏப்.25ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும். அன்று பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் அழகர், அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல், அன்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடைபெறுகிறது. ஏப்.26ம் தேதி அழகர் மலைக்கு புறப்படும். அன்று இரவு அப்பன் திருப்பதியில் விடிய விடிய திருவிழா நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்.27ம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேரும். சித்திரைத் திருவிழா துவங்குவதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. ஏப்.21ல் திருக்கல்யாணம், ஏப்.23ல் வைகையில் அழகர் இறங்கும் வைபவம் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman painting festival ,Thirukalyanam ,Alaghar ,Vaigai ,Madurai ,Madurai Meenakshiyamman Temple painting festival ,Meenakshi Thirukalyanam ,Chitrai festival ,Meenakshiyamman temple ,Madurai Meenakshiyamman Chitrai festival ,Tirukalyanam ,Alagara ,
× RELATED வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி