×

நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி காலமானார்

சென்னை: தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி. அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், சிங்கம், லிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் அருள்மணி நடித்துள்ளார். நடிப்பு மட்டுமன்றி, அ.தி.மு.க.வின் பேச்சாளராகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதிமுகவுக்கு ஆதரவாக 10 நாட்களாக பரப்புரைக்காக வெளியூர் சென்றிருந்த அவர் சென்னை திரும்பி தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் அருள்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டும் அது பலனளிக்காமல் அருள்மணி இரவு 9.30 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மணி மறைவு அரசியல் மற்றும் சினிமாவுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நல்லடக்கம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி காலமானார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Arulmani ,Chennai ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்