மதுரை: பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ₹1,500 கோடி மதிப்புள்ள சொத்தை மறைத்துள்ளதால், திருநெல்வேலி தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் தற்போதைய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார்.
பல விபரங்களை முறையாக பூர்த்திசெய்யவில்லை. 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில், போதுமான விபரங்கள் இல்லை. பல்வேறு இடங்களில் தனக்கும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள ₹1,500 கோடி மதிப்பிற்கும் மேல் ெசாத்துக்கள் இருப்பதை மறைத்துள்ளார். நாங்குநேரி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக உள்ள தீண்டாமை வன்கொடுமை வழக்கை மறைத்துள்ளார். படிவம் 26ல் எந்த பதவிக்கு போட்டியிடுவது, கட்சி சார்பிலா, சுயேட்சையா என்பது குறித்து விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை. இதுகுறித்து வேட்பு மனு பரிசீலனையின் போது திருநெல்வேலி மக்களவை தேர்தல் அதிகாரியிடம் முறையாக மனு அளித்திருந்தேன். அந்த மனுவை எந்தவித விசாரணையும் செய்யாமல் நயினார் நாகேந்திரனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம்.
₹1,500 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதை வேண்டுமென்றே மறைத்துள்ளார். எனவே, மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதால் நெல்லை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும், தேர்தலை நடத்த தடையும் விதிக்க வேண்டும். எனது ஆட்சேபனையை தேர்தல் அதிகாரிகள் பரிசீலிக்குமாறும், தவறான வேட்பு மனுவை தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் மீதும், முறையாக செயல்படாத தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post நயினார் நாகேந்திரன் ₹1,500 கோடி ெசாத்து மறைப்பு; நெல்லை தொகுதியில் தேர்தல் நடத்த தடை கோரி வழக்கு appeared first on Dinakaran.