×
Saravana Stores

டு பிளெஸ்ஸி 61, ரஜத் 50, கார்த்திக் 53*; ராயல் சேலஞ்சர்ஸ் 196 ரன் குவிப்பு

மும்பை, ஏப். 12: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 3 ரன் மட்டுமே எடுத்து பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட, பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன் எடுத்து மத்வால் பந்துவீச்சில் டேவிட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி 3.4 ஓவரில் 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி – ரஜத் பத்திதார் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். அதிரடியாக விளையாடிய ரஜத் பத்திதார் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. ரஜத் 50 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் இஷான் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். எனினும், டு பிளெஸ்ஸி – தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். டு பிளெஸ்ஸி 61 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். மகிபால் லோம்ரர் (0), சவுரவ் சவுகான் (9), விஜய்குமார் (0) ஆகியோர் பும்ராவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அணிவகுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 53 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஆகாஷ் தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 5, கோட்ஸீ, மத்வால், கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

The post டு பிளெஸ்ஸி 61, ரஜத் 50, கார்த்திக் 53*; ராயல் சேலஞ்சர்ஸ் 196 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Du Plessis ,Rajat 50 ,Karthik 53 ,Royal Challengers ,Mumbai ,IPL league ,Mumbai Indians ,Bangalore ,Whangade Stadium ,Plessy ,Rajat ,Karthik ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானுடன் ஆர்சிபி தோல்வி; நாங்கள்...