×

பாஜ வேட்பாளர் மீது ₹525 கோடி மோசடி புகார்; அமித்ஷா ரோடு ஷோ மீண்டும் ரத்து: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளரால் தென்காசி பேரணியையும் ரத்து செய்தார்

* தமிழகத்தில் பாஜவின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பிரதமர் மோடி 7 முறை வந்து போய் உள்ளார்.
* சென்னையில் நடந்த ரோடு ஷோவுக்கும், வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கும் மக்கள் ஆதரவு இல்லை.

சென்னை: ரூ.525 கோடி மோசடி புகார் எதிரொலியாக பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக காரைக்குடியில் அமித்ஷா இன்று நடத்த இருந்த ரோடு ஷோவும், தென்காசியில் நடத்த இருந்த பேரணியும் ரத்தாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கும் பாஜவுக்கும், ராசியில்லை என பாஜ கூட்டணி கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக மற்றும் பாஜ தலைமையில் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி, பாஜ கூட்டணிக்கு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கும், பாஜ கூட்டணிக்கும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லை.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜவின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பிரதமர் மோடி 7 முறை வந்து போய் உள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை. சென்னையில் நடந்த ரோடு ஷோவுக்கும், வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கும் மக்கள் ஆதரவு இல்லை. இதனால், பாஜ தரப்பு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் 10, 20 பேர் தான் செல்கின்றனர். பல இடங்களில் டெபாசிட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, அமித்ஷா சென்னை வரும் நிகழ்ச்சி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜ வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தானது. இது வேட்பாளர் தேவநாதன் மற்றும் பாஜவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்குடிக்கு ஹெலிகாப்டரில் வந்து, ரோடு ஷோ நடத்திவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோயிலுக்கு செல்வதாக நிகழ்ச்சி இருந்தது. இதையடுத்து காரைக்குடி டிஎஸ்பி ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு மற்றும் ஒத்திகை பார்த்து வந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ 3வது முறையாக ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை பாஜ கூட்டணியில் நிற்கும் வேட்பாளர் தேவநாதன் யாதவ், மயிலை சாசுவத நிதி லிட் கம்பெனியின் தலைவராக உள்ளார். இந்த நிதி நிறுவனம் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திருப்பிக் கேட்டு வருகின்றனர். ஆனால் முதிர்வடைந்த பின்னரும் பணத்தை திருப்பி தராமல் மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தால் அவர்கள் மீது யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் அளித்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் மீது போலீசார் எப்போது வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளது.

நாடு முழுவதும் மோசடி, ஊழல் புகாருக்கு உள்ளானவர்கள் பாஜவில் சேர்ந்ததும் அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு வருகிறது. பலர் விடுதலை செய்யப்படுகின்றனர். இது தமிழக தேர்தலிலும் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால் ஒவ்வொரு கட்சியையும் எடை போட்டு வைத்துள்ளனர். இதனால் வடமாநிலத்தில் உள்ளவர்களை ஏமாற்றுவதுபோல தமிழக மக்களை ஏமாற்ற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.

இதனால், தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக ரோடு ஷோ செல்லும் நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தால், குற்றவாளிக்கு ஆதரவாக ஒன்றிய உள்துறை அமைச்சரே பிரசாரம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும். இதனால் பயந்துபோன, அமித்ஷா காரைக்குடியில் நடத்த இருந்த ரோடு ஷோவை ரத்து செய்து உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அமித்ஷா, இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வருகிறார். அங்கு சாமி கும்பிட்டு முடித்ததும், மதுரை செல்கிறார். மதுரையில் பிரசாரம் முடித்து விட்டு நேரடியாக திருவனந்தபுரம் செல்கிறார். முன்னதாக தென்காசியில் ரோடு ஷோ நடத்துவதாக திட்டமிட்டிருந்தார். அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டள்ளது.

தென்காசியில் பாஜ கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். அவர் மீது தற்போது குற்றச்சாட்டு இல்லை என்றாலும் ஜாதி கட்சி என்ற அடையாளம் உள்ளது. மேலும், அவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்தவர். இதுகுறித்தும் விமர்சனம் எழும் என்பதால், இந்த பேரணியையும் அமித்ஷா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 2 ரோடு ஷோ ரத்து செய்யப்பட்ட சம்பவம் கூட்டணி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், இந்த தேர்தலில் பாஜ எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. எந்த பிரசாரத்தை தொட்டாலும் அது திருப்பி தாக்குகிறது. இதன் ஒரு கட்டமாக அமித்ஷாவின் கூட்டம் 3 முறை ரத்து செய்யப்பட்டுள்ளது பாஜ கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 13ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்து ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த திட்டம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

The post பாஜ வேட்பாளர் மீது ₹525 கோடி மோசடி புகார்; அமித்ஷா ரோடு ஷோ மீண்டும் ரத்து: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளரால் தென்காசி பேரணியையும் ரத்து செய்தார் appeared first on Dinakaran.

Tags : Baja ,Amitsha Road Show ,Tencasi rally ,PM Modi ,Tamil Nadu ,Bajaj ,Chennai ,Vellore ,Tenkasi rally ,Dinakaran ,
× RELATED பாஜ வேட்பாளர் மீது ₹525 கோடி மோசடி...