×

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: மேலும் அதிகரிக்க ‘ஹெல்ப் லைன்’ வசதி

வேலூர்: தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், ‘ஹெல்ப் லைன்’ வசதியை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் 37,576 அரசுப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மொத்தம் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2.25 லட்சம் ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி, டிஜிட்டல் வகுப்பறைகள், விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றுடன் கணினி மூலம் கற்பிக்கும் வசதி, நவீன ஆய்வகங்கள் என தனியார் பள்ளிகளுக்கு ஈடான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டத்தை இந்த கல்வி ஆண்டு பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் மார்ச் 1ம் தேதி தொடங்கியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றோர்களிடம் தெரிவித்து, தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 3.20 லட்சம் பேர் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிக அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 23 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கையை முடித்த மாவட்டங்களாக நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன.

பள்ளிகள் திறக்கும் நாள் வரை மொத்தம் 5.5 லட்சம் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டிய நிலையில், அரசுப்பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் இவற்றுடன் சேர்க்கைக்கு தேவைப்படும் சான்றிதழ்கள், அவற்றை பெறும் நடைமுறைகள் உட்பட பல்வேறு நடைமுறை சிக்கல்களை இன்னமும் பெரும்பாலான பெற்றோர்கள் சந்தித்து வருவதால் புதிய மாணவர் சேர்க்கையில் இடர்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க உதவும் வகையில் அவர்களுக்கு ‘ஹெல்ப் லைன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப் லைன் மூலம் தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற்றோர்கள் பெறலாம். இதுதொடர்பாக பெற்றோர்களை அணுகும் ஆசிரியர்கள் விளக்குவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: மேலும் அதிகரிக்க ‘ஹெல்ப் லைன்’ வசதி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Department of Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு...