×
Saravana Stores

ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் 25-வது லீக் போட்டியில் மும்பை, ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோல்விக்கு பின், உள்ளூரில் நடந்த கடந்த போட்டியில் டெல்லி அணியை வென்று வெற்றிக்கணக்கை தொடங்கியது. இதில் இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் மற்றும் ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை 234 ரன்கள் குவிதததுடன், டெல்லியை 205 ரன்னில் கட்டுப்படுத்தியது.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியில் டக்-அவுட் ஆனார். இருப்பினும் இன்று அவர் தனது வழக்கமான அதிரடியை காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று 2-வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் உள்ளனர். இதுபோல் டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 5 போட்டிகளில் ஆடி, பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோஹ்லி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 316 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக மேக்ஸ்வெல் (5 போட்டியில் 32 ரன்), கேப்டன் டூபிளசிஸ் (109ரன்), கேமரூன் கிரீன் (68 ரன்), ரஜத் படிதார் (50 ரன்) ஆகியோரின் மோசமான ஆட்டம்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் சரியான லெவன் அமையவில்லை. கோஹ்லியுடன் மற்ற பேட்ஸ்மேன்களும் நிலைத்து நிற்பதுடன் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் மும்பையை அதன் சொந்த மண்ணில் மடக்க முடியும். இதை உணர்ந்து ஆர்சிபி அணி வீரர்கள் தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : IPL T20 Mumbai- ,RCB ,Mumbai ,IPL ,Royal Challengers ,Wankhede Stadium ,Delhi ,IPL T20 ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...