×

தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில் கோடை வெயிலால் உணவு, குடிநீர் தேடி அலையும் வனவிலங்குகள்: பொதுமக்கள் அச்சம்

செங்கோட்டை: தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில் கோடை வெயில் கொளுத்துவதால் உணவு, குடிநீர் தேடி வனவிலங்குகள்ள் குடியிருப்பு பகுதிக்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டுபன்றி, செந்நாய், கரடி உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன. அரிய வகை பட்டாம் பூச்சிகளும் இங்கு காணப்படுகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. இதனால் உணவு, குடிக்க தண்ணீர் கிடைக்காததால் வனவிலங்குகள் பல்வேறு இடங்களுக்கு நீரை தேடி அலைகின்றன. அதே நேரத்தில் வனப்பகுதிகளில் அவ்வப்போது கடும் வெயில் காரணமாக ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. இதனால் தமிழக – கேரளா எல்லையோர கிராமங்களில் வனவிலங்குகளான யானை, புலி, மான்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. ஆரியங்காவு ஊராட்சியில் கோடை வெயில் காலங்களில் காட்டு மான், புலி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

ஆரியங்காவு முருகன்பஞ்சலில், ரயில்வே தண்டவாளத்திற்கு மேல், கொல்லப்பரம்பில் எனும் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள விவசாய நிலங்களில் வாழை, தென்னை பயிரிடப்பட்டுள்ளன. ராய் ஜோசப், ஜார்ஜ் மேத்யூ, சுரேந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் உள்ள பாக்கு, தென்னை, வாழை, கோவக்காய், உள்ளிட்ட பயிர்களை நேற்று முன்தினம் காட்டு யானைகள் தின்று, மிதித்து நாசம் செய்தது. மேலும் கழுதுருட்டியை சேர்ந்த சுகதன் என்பவரது வீட்டு முற்றத்திற்கு காட்டு யானை வந்துள்ளது. அங்கு எதையும் சேதப்படுத்தவில்லை. மணலாறு – கும்பாவுருட்டி இடையே அச்சன்கோவில் சாலையில் 3 இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அச்சன்கோவில் வனத்துறையினர் சாலையில் வருபவர்களையும், வாகனங்களையும் எச்சரித்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரியங்காவு கடமான்பாறையில் டாமி என்பவர் வீட்டு நாயை புலி தூக்கி சென்றது. தமிழகத்தில் குண்டாறு அணை அருகே உள்ள மோட்டை, இரட்டை குளம், பூத்தரம் பகுதிகளில் காட்டு யானை கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் வந்து அங்குள்ள தென்னை, வாழை, மாமரங்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் வெடி வெடித்து விரட்டி அனுப்புகின்றனர். ஆனாலும் இந்த காட்டு யானை தொடர்ந்து வருவது இப்
பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடும் கோடை வெயில் காரணமாக வன விலங்குகள் தமிழகம்-கேரளா மாநில எல்லையோர பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தமிழக கேரளா மாநில வனத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில் கோடை வெயிலால் உணவு, குடிநீர் தேடி அலையும் வனவிலங்குகள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu-Kerala ,Sengottai ,Western Ghats ,Tamil Nadu ,Kerala ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...