×
Saravana Stores

திமுக, அதிமுக, காங்., பாமக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள உசுப்பூர் ஊராட்சியில் ராஜேந்திரன் கார்டன் பகுதியில் திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இவரது வீட்டிற்கு நேற்று மாலை பறக்கும் படை அதிகாரிகள் வந்தனர். காரில் பணம் வைத்துக்கொண்டு விநியோகப்பதாக கூறி காரை சோதனை செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த கடலூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் பறக்கும் படையினர்ஒரு மணி நேரமாக வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.

முஷ்ணத்தில் திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தனின் வீடு மற்றும் விடுதியில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். ஆவணம் ஏதும் கிடைக்காத நிலையில் தங்க ஆனந்தனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறுகூறி விட்டு புறப்பட்டு சென்றனர். இதேபோல் அதிமுகவில் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விருத்தாசலம் பரவலூர் அருகே எருக்கன்குப்பத்தைச் சேர்ந்தவர் இ.கே.சுரேஷ். பாமக மாநில இளைஞர் சங்க செயலாளரான இவரது வீட்டிலும் வருமான வரியைத் துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் எந்தவித ஆவணங்களோ, பணமோ சிக்காததால் 7 மணியளவில் அதிகாரிகள் வெளியேறினர்.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் டாக்டர் சக்திமோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது. அதன்பின் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சியில் வசிப்பவர் தாமஸ். வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான இவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்து சில ஆவணங்களை காரில் எடுத்துச் சென்றனர்.

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவாளர் வீட்டில் சோதனை
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். பாஜ பிரமுகரான இவர் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராவார்.இவர் சொந்தமாக கன்ஸ்ட்ரக்‌ஷன் வைத்து தொழில் செய்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வருமானவரித் துறை அதிகாரிகள் 5 பேர் ரவிக்குமாரின் 2 வீடுகள் மற்றும் அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனை செய்தனர்.

அமைச்சர் ராமச்சந்திரன், பாமக எம்எல்ஏ காரில் சோதனை
குன்னூர் அருகே பாரத் நகர் பகுதிகளில் பிரசாரத்திற்காக நேற்று சென்ற சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் காரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அவருடன் சென்ற இரு வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். அதில், பணமோ அல்லது பரிசு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அண்ணாதுரை நேற்று கன்னங்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில், பங்கேற்க சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் தனது காரில் அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி புறப்பட்டார். கொண்டப்பநாயக்கன்பட்டி அருகே அருள் எம்எல்ஏ கார் வந்தபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சந்தேகப்படும் விதத்தில் எதுவும் இல்லாததால், அவரை தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

The post திமுக, அதிமுக, காங்., பாமக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Adimuka ,Kang. ,Pamaka ,Chennai ,Dimuka Kumarati ,Union Secretary ,Sankar ,Rajendran Garden ,Usuppur Uratchi ,Chidambaram, Cuddalore district ,Thirumavalavan ,Dinakaran ,
× RELATED திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை...