×

பராக் – சாம்சன் ஜோடி அமர்க்களம்: ராஜஸ்தான் 196 ரன் குவிப்பு

ஜெய்பூர்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேப்டன் சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடியின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது.

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஷ் பட்லர் இணைந்து ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 24 ரன் (19 பந்து, 5 பவுண்டரி) விளாசி உமேஷ் யாதவ் வேகத்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் வசம் பிடிபட்டார்.

பட்லர் 8 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் திவாதியா வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடி அதிரடியாக ரன் குவிக்க, ராஜஸ்தான் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. பராக் 34 பந்தில் அரை சதம் அடிக்க, சாம்சன் 31 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். பராக் 76 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி மோகித் பந்துவீச்சில் விஜய் ஷங்கர் வசம் பிடிபட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சாம்சன் 68 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் உமேஷ், ரஷித், மோகித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

The post பராக் – சாம்சன் ஜோடி அமர்க்களம்: ராஜஸ்தான் 196 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Barak ,Samson Jodi Amarfield ,Rajasthan ,Jaipur ,IPL League ,Gujarat Titans ,Rajasthan Royals ,Sanju Samson ,Ryan Barak ,Sawai Monching Stadium ,Samson Jodi Amarkalam ,Dinakaran ,
× RELATED பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத்