×

16.7 லட்சம் பேருக்கு பூத் சிலிப் விநியோகம் சென்னையில் இதுவரை 1003 பேர் தபால் வாக்கு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப். 11: சென்னையில் உள்ள மூன்று எம்பி தொகுதிகளில் இதுவரை 1003 பேர் தபால் வாக்கு பதிவு செய்து இருப்பதாகவும், 16.7 லட்சம் பேருக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இதனைதொடர்ந்து, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ஜார்ஜ் டவுன், பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ச்சியாக, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, திருவான்மியூர், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடசென்னை மற்றும் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மத்திய சென்னையில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகிறது.

இந்த துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அரசியல் கட்சிகளின் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணி இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு 11,843 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் 20% முன்னிருப்பு உள்பட பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குச்சாவடி வாரியாக 31 வேட்பாளர்கள் உள்ள மத்திய சென்னையில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 41 வேட்பாளர்கள் உள்ள தென்சென்னையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 35 வேட்பாளர்கள் உள்ள வடசென்னையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை 16.7 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 611 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 சவாலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் 10 வாக்குச்சாவடிகளுக்கு மேலுள்ள 135 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 769 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நுண் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களில் இதர மாவட்டங்களில் 6,760 பேர், சென்னை மாவட்டத்தில் 7,965 பேர், பாண்டிச்சேரியில் 10 பேர் என 14,735 அரசு ஊழியர்களிடமிருந்தும், காவல் பணியாளர்களில் இதர மாவட்டங்களில் 14,533 பேர், சென்னை மாவட்டத்தில் 4,538 பேர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 51 பேர் என 19,122 பேரிடமிருந்தும் தபால் வாக்குகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4,538 தபால் வாக்குகளில் இதுவரை 1003 நபர்கள் வாக்களித்துள்ளனர்.

தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக ரூ.14.73 கோடி, வருமான வரித்துறை சார்பில் ரூ.19.92 கோடி, மதுபானம் மற்றும் போதைப் பொருள் உள்ளிட்ட ரூ.59.33 லட்சம் மதிப்பிலான பொருள்களும், கலால் துறை மூலம் ரூ.1 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) சுரேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவண்ணன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

n 19,412 பயிற்சி பெற்ற தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
n தபால் வாக்குகளுக்காக இதுவரை 14,735 அரசு ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
n 14 கோடியே 72 லட்சத்து 70 ஆயிரத்து 399 ரூபாயை இன்றுவரை தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
n வருமான வரித்துறையினர் ₹19.92 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.
₹59 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post 16.7 லட்சம் பேருக்கு பூத் சிலிப் விநியோகம் சென்னையில் இதுவரை 1003 பேர் தபால் வாக்கு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...