×
Saravana Stores

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்

*வேளாண் அதிகாரி ஆலோசனை

அரியலூர் :உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால்அதிக மகசூல் பெறலாம் என்று அரியலூர் வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.அரியலூரில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ள உளுந்த பயிரை பார்வையிட்ட அவர், தெரிவித்ததாவது: தற்போது நிலவி வரும் அதிக வெப்ப நிலையின் காரணமாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த நோயானது ஒருவகை வைரஸ்ஸல் ஏற்படுத்தப்பட்டு வெள்ளை ஈக்களினால் மற்ற பயிர்களுக்கு பரப்பப்படுகிறது.இந்த வைரஸ் நோய் தாக்கத்தினை கட்டுபடுத்திட பின் வரும் காரணிகளை கடைபிடிக்க வேண்டும். உளுந்து விதைகளை விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு போராக்ஸ் மருந்து 2 கிராம் மற்றும் நொச்சி இலை சாறு 300 மில்லி என்ற கரைசலில் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் இமிடாகுளோபிரிட் 60 எ.ப்.எஸ். 5 மில்லி என்ற அளவில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

வரப்பு பயிராக மக்காசோளத்தினை பயிரிடுவதன் மூலம் வெள்ளை ஈயை கட்டுபடுத்தலாம். விதைத்த 25 வது நாளில் வைரஸ் நோய் பாதிப்பு தென்பட்டால் பாதிக்கப்பட்ட செடியினை முழுமையாக பிடிங்கி அகற்ற வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டு பொறி வயலில் வைப்பதினால் வெள்ளை ஈ நடமாட்டத்தினை கட்டுபடுத்தலாம். மேலும் போராக்ஸ் மருந்து 0.1 சதவீதம் மற்றும் நொச்சி இலை சாறு 10 சதவீதம் என்ற அளவிலான கரைசலை விதைத்த 30 ஆவது நாள் இலை வழியாக தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுபடுத்தலாம்.

மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டால் அசிட்டாமிப்ரிட் 20 எஸ்.பி. என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை ஒரு ஏக்கருக்கு 250 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம்.மேற்கண்ட கட்டுபாட்டு முறைகளை கடைபிடிப்பதன் மூலம் மஞ்சள் தேமல் நோயினை கட்டுபடுத்தி அதிக மகசூல் பெறலாம் என வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Assistant Director ,Shanti ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர...