×

வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் அமைப்பு பணிகள்

ஊட்டி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணும் அறை அமைப்பு பணிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ேவட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகள், கோவை மாவட்டத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவிநாசி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் என நான்கு மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே நீலகிரி நாடாளுமன்ற தொகுதியாகும். கடந்த மாதம் 27ம் ேததி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி இத்தொகுதியில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளர்கள் உள்ளனர். 1619 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர், சமவெளி பகுதிகளில் உள்ள மேட்டுபாளையம், பவானிசாகர், அவினாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குபதிவு இயந்திரங்களும் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தேர்தலில் வாக்குபதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம், மற்றும் ஓட்டு எண்ணும் அறைகள் துரிதகதியில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்கள் அனைத்தும் பிளேவுட், தகரம் போன்றவைகள் கொண்டு மூடப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் அறைகளில் இரும்பு வலை தடுப்புகள் போன்றவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தரையில் வர்ணம் பூசி எண்ணிடப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா வாக்கு எண்ணும் மையமான பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி தொகுதியில் வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்திட அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடம், வாக்கு எண்ண ஏதுவாக போடப்படும் மேஜை, முகவர்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை, மின், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கல்லூரியில் வாக்கு எண்ணும் அைறகள், ஸ்ட்ராங் ரூம் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள் வரை மையத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

The post வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் அமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Govt Polytechnic College ,Ooty ,Government Polytechnic College ,Fingerpost ,Nilgiri ,Tamil Nadu ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...