×

அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் நாசம் கொடைக்கானலில் காட்டுத்தீ

*புகை மண்டலத்தால் மக்கள் அவதி

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கொடைக்கானலில் தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசன், வார மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் கூட்டம் களைகட்டும். கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகள், தரிசு பட்டா நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.

இதன் காரணமாக அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல்மலை கிராமப்பகுதியான பூம்பாறை, மன்னவனூர் வனப்பகுதி மற்றும் அருகிலுள்ள நிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பரவியது. இதை அணைக்க வனத்துறையினர் முயன்றும் முடியவில்லை. தீ மளமளவென பரவியதால் பல ஏக்கர் பரப்பளவிலான விலை உயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.

மேலும், மன்னவனூர் கிராமத்தை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வனத்துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதியில் நவீன உபகரணங்களை கொண்டு காட்டுத்தீயை அணைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் நாசம் கொடைக்கானலில் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Manvanur ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள்...