×

வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல் பிரசார வாகனம் உடைப்பு: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம், ஏப்.10: பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரத்தின் போது, அக்கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு, பிரசார வாகனத்தை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜ மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அவரது கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, அதிமுக சார்பில் பிரேம்குமார் என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் புது முகமான இவரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியதற்கு அதிமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இந்நிலையில், பழைய பல்லாவரம் பிரதான சாலையில், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜப்பா என்பவர் தனது ஆதரவாளர்களுடன் மேள தாளம் முழங்க வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து வேட்பாளர் பிரேம்குமார், அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பிரசாரம் செய்யும் வாகனத்தில் ஏறினார். அப்போது, அவரது அருகில் நிற்பதற்காக ராஜப்பா வண்டியில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அங்கு ஏற்கனவே வேட்பாளர் அருகில் நின்று கொண்டிருந்த பல்லாவரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் மற்றும் அவரது மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ராஜப்பாவை பிரசார வண்டியில் ஏற விடாமல் தடுத்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வேட்பாளர் முன்னிலையிலேயே ராஜப்பா மற்றும் தன்சிங் தரப்பினர் ஒருவரையொருவர் வசைபாடி, கை கலப்பில் ஈடுபடத் தொடங்கினர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ‘‘ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜப்பா தரப்பினர், வேட்பாளர் பிரேம்குமாரின் பிரசார வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

இதனால் அப்பகுதியில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதை பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து, பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால் இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போலீசாரின் முன்னிலையிலேயே தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் பிரச்னையை சமாளிக்க வழி தெரியாமல் விழித்த வேட்பாளர் பிரேம்குமார், தானே வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, ராஜப்பாவின் கையை பிடித்து, நடந்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக கூறினார். அதன் பிறகே இரு தரப்பினரும் சமாதானமடைந்து அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில், தங்களது சொந்த பிரச்சனையையே தீர்க்க முடியாமல் அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து போலீசாரின் முன்னிலையில் ஆக்ரோசமாக மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல் பிரசார வாகனம் உடைப்பு: பல்லாவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pandemonium ,Pallavaram ,Tamil Nadu ,DMK ,BJP ,
× RELATED சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக...