×
Saravana Stores

வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்

தண்டராம்பட்டு, ஏப்.10: தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் காதை அறுத்து 8 சவரன் நகைகளை முகமூடி ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெருந்துறைப்பட்டு ஊராட்சி எடக்கல் சாலை லே அவுட் பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி மனைவி லூர்துமேரி(63). இவரது 3 மகள்களும் வெளியூரில் வசிக்கின்றனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் மூதாட்டி லூர்துமேரி வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, வெளியே உள்ள சமையலறை பகுதியில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே லூர்துமேரி வெளியே வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், `நாங்கள் போஸ்ட்மேன், லெட்டர் கொடுக்க வந்துள்ளோம்’ என பேச்சு கொடுத்தபடியே உள்ளே வந்தனர். முகமூடி அணிந்து கொண்டிருந்த அவர்கள் திடீரென லூர்துமேரியை வீட்டின் உள்ளே தள்ளிக்கொண்டு சென்றனர்.

இதனால் பதற்றமடைந்த லூர்துமேரி சத்தம் போட்டதும், வாலிபர்களில் ஒருவன் தன்னிடம் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து அவரது வாயை பொத்தினார். இதனால் செய்வதறியாமல் லூர்துமேரி திணறினார். உடனே, அந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, லூர்துமேரி வலது காதை கத்தியால் அறுத்து கம்மல் மற்றும் மாட்டலை பறித்தனர். பின்னர், மற்றொரு காதில் இருந்து கம்மல், மாட்டலை பறித்து கொண்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயின் என 8 சவரன் நகைகளை பறித்து கொண்டனர். பின்னர், லூர்துமேரியை கீழே தள்ளிவிட்டு வெளியே வந்த வாலிபர்கள் இருவரும் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளில் தனித்தனியே அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.

இதற்கிடையில், மூதாட்டி லூர்துமேரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரது காது அறுந்தும், கழுத்து மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் ரூரல் டிஎஸ்பி முருகன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், எஸ்ஐ அம்பிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் எஸ்ஐ சுரேஷை வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, மோப்ப நாய் வீராவை கொண்டு வந்து துப்புத்துலக்கினர். வீட்டை சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய், கொள்ளையர்களின் பைக்குகள் சென்ற வழியாக சிறிது தூரம் ஓடி பின்னர் நின்றுவிட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து நகைகள் கொள்ைள அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Thandaramptu ,Thandarampattu ,Thiruvannamalai district ,Dandarampatu ,Perundurapattu ,Thandarampatu ,Dinakaran ,
× RELATED தங்கம் விலையில் தொடர் மாற்றம்; 5 நாளில்...