×

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; இன்று மாலை இறுதி சடங்கு

சென்னை: மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தனது 98வது வயதில் நேற்று காலமானார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

எம்.ஜி.ஆரின் நிழலாக வலம் வந்த இவர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தார். எம்ஜிஆர் கழகம் மற்றும் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்த ஆர்எம் வீரப்பன் வயது முதிர்வு காரணமாக தி.நகரில் உள்ள திருமலை பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவருக்கு வயது 98. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு திடீரென்று முச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது.

இதற்காக சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று காலை மோசமடைந்த நிலையில், மதியம் அவரது உயிர் பிரிந்தது. ஆர்.எம்.வீரப்பன் காலமான தகவல் கிடைத்தவுடன், மதுரையில் பிரசாரத்தில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை திரும்பி, மருத்துவமனைக்கு சென்று ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர். மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், தமிழழகன், செல்வம், தங்கராஜ் ஆகிய 3 மகன்களும், செந்தமிழ்ச்செல்வி, செந்தாமரை, தமிழரசி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். ஆர்.எம்.வீரப்பன் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், திரை உலகத்தினர் என ஏராளமானோர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.  ஆர்.எம்.வீரப்பன், 1977-1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1991 இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

* திராவிட இயக்கத்தின் முன்னோடி: முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர்.

பின்னாளில், எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார். ஆர்.எம்.வீரப்பன் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக பொதுச்செயலாளர்), கி.வீரமணி (திக தலைவர்), வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்), செல்வ பெருந்தகை எம்எல்ஏ (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்), ராமதாஸ் (பாமக நிறுவனர்), திருநாவுக்கரசர் (முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்), ஓ.பன்னீர் செல்வம் எம்எல்ஏ (முன்னாள் முதல்வர்),

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்), பூச்சி முருகன் (வீட்டு வசதி வாரிய தலைவர், ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்), டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச்செயலாளர்), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்), ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்) உள்ளிட்டோரும் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; இன்று மாலை இறுதி சடங்கு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,R. M. Player ,Stalin ,Chennai ,minister ,R. M. ,K. Stalin ,Tamil Nadu ,. K. ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...