×

அண்டை மாநிலங்களுக்கு உரிய சான்றுடன்தான் மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா? : நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்

சென்னை : தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு உரிய சான்றுடன்தான் மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா என சரிபார்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அடிமாடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு தடை விதிக்க கோரி 2002ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், உரிய சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலநேரில் ஆஜரான டிஜிபி, உரிய சான்றிதழ்களுடன் மட்டுமே மாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என சோதனை சாவடிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

ஆனாலும் ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான மாடுகள், உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 3 வருடத்தில் நாட்டு மாடு இனங்களே இல்லாத நிலை உருவாகும்.எனவே விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல், மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மீறினால், வாகனங்களை பறிமுதல் செய்து, மீட்கப்படும் மாடுகளை கோ சாலையில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டதாக 387வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு உரிய சான்றுடன்தான் மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா என சரிபார்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம். போலீசாரும் சான்றுகளை சரிபார்க்க வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வது குறித்து 2007-ல் பிறப்பித்த சுற்றறிக்கையை கண்டிப்புடன் பின்பற்ற ஆணையிடுகிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post அண்டை மாநிலங்களுக்கு உரிய சான்றுடன்தான் மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா? : நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Highway Authority ,CHENNAI ,High Court ,National Highways Authority ,Tamil Nadu ,Yanai Rajendran ,Madras High Court ,Kerala ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...