×

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மரணம்.. பெரியார், அண்ணாவுடன் நெருங்கி பழகியவர்!!

சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 97) வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணியாக உருவாக காரணமாக இருந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றிபெற்ற பாட்ஷா படத்தை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர். மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் சத்யா மூவிஸ் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் படங்களை தயாரித்தவர். ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை உள்ளிட்டபல படங்களையும் இவர் தயாரித்துள்ளார் .அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தபோது அவரது வீடியோவை வெளியிட்டு அதிமுக வெற்றிக்கு வித்திட்டவர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜானகி, ஜெ. அணிகள் இணைந்ததும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆர்.எம்.வீரப்பன்.நெல்லை, காங்கேயம் தொகுதிகளில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் ஆர்.எம்.வீரப்பன். தமிழ்நாடு அரசில் கல்வி, உணவு, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தவர். நாடோடி மன்னன் படத்தின் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலாசிரியராக அறிமுகமாக உதவியவர்.

கலைஞருடன் நெருங்கி பழகி வந்த ஆர்.எம்.வீரப்பன் முதல்வர் மு. க. ஸ்டாலினுடனும் நட்புடன் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அரசியல் கட்சியின் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ஆர்.எம். வீரப்பனின் 96வது பிறந்த நாளை ஒட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மரணம்.. பெரியார், அண்ணாவுடன் நெருங்கி பழகியவர்!! appeared first on Dinakaran.

Tags : M. G. R. R. ,Jayalalithaa ,Periyar ,Anna ,Chennai ,Former Minister ,R. M. ,Peryaar ,Prophet ,Pudukkottai district ,R. M. Veerappan ,M. G. Aridum ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...