×

உச்சபட்ச மின் தேவை 20,125 மெகாவாட் பதிவு; 20000 மெகாவாட்டை கடந்தது.! மின் வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தின் மின் தேவை நேற்று 20,000 மெகாவாட்டை கடந்து 20,125 மெகாவாட் என்ற உச்சபட்ச மின் தேவை பதிவானதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள், ஏசிக்கள் ஆப் செய்யப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஏப்.20ம் தேதி மாநிலத்தின் மின் தேவை 19,387 மெகாவாட்டாக இருந்தது. இது கடந்தாண்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அளவுகளாகும். ஆனால் இந்தாண்டு கடந்த மார்ச் 22ம் தேதியன்றே 19,407 பதிவாகி கடந்த ஆண்டின் அளவை கடந்தது.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த 3ம் தேதி 19,413 மெகாவாட், 4ம் தேதி 19,415 மெகாவாட், 5ம் தேதி 19850 மெகாவாட் மின் தேவை. தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை மின் வாரியம் எட்டியுள்ளது. அதன்படி நேற்று (8ம் தேதி) மின் தேவை 20,125 மெகா வாட்டாக பதிவானது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் தேவை தொடர்ந்து புதிய உச்சமாக 20,000 மெகாவாட் மைல்கல்லை கடந்து, நேற்று மாலை 3.30-4 மணி வரை 20,125 மெகா வாட் உச்சபட்ச தேவை பதிவாகியுள்ளது. 3 நாள்களுக்கு முன்பு 5ம் தேதி உச்சபட்ச தேவை 19,580 மெகாவாட் என பதிவாகியிருந்தது. மின் வாரியம் தொடர்ந்து தனது நுகர்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்து வருகிறது.

The post உச்சபட்ச மின் தேவை 20,125 மெகாவாட் பதிவு; 20000 மெகாவாட்டை கடந்தது.! மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...