×
Saravana Stores

தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது நெகிழ்ச்சியாக இருந்தது: கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

சென்னை : டோனியுடன் இணைந்து பேட்டிங் செய்து ஆட்டத்தை முடித்தது பல சம்பவங்களை நினைவுபடுத்துவதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி தரப்பில் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். சிவம் துபே 28 ரன்களையும், டேரல் மிட்சல் 25 ரன்களையும் விளாசினர். இதன் மூலமாக 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் முன்னாள் கேப்டன் டோனி, கேப்டன் ருதுராஜ் இருவரும் இணைந்து ஆட்டத்தை முடித்தனர். சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அடிக்கும் முதல் அரைசதம் இது. இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், இது எனக்கு நெகிழ்ச்சியானதுதான். ஏனென்றால் எனது முதல் ஐபிஎல் அரைசதத்தின் போது டோனியும் நானும் இணைந்து ஆட்டத்தை முடித்தோம். அதேபோல் கேப்டனாக முதல் அரைசதம் அடித்த போதும் நானும் அவரும் இணைந்து போட்டியை முடித்துள்ளோம். ரஹானே காயமடைந்ததால், கடைசி வரை களத்தில் நிற்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இளம் வீரர்களை இந்த சூழலில் தள்ள விரும்பவில்லை. இந்த பிட்ச் 150 முதல் 160 ரன்கள் அடிக்க கூடியது என்றே நினைக்கிறேன். ஜடேஜாவை பவர் பிளே முடிவடைந்ததும் எப்போதும் பவுலிங் செய்ய கொண்டு வருவோம். அதனை தான் இன்றும் செய்தோம். சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை. அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்கள். டோனி மற்றும் ஃபிளெமிங் இருவரும் முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் ஸ்லோவாக தொடங்கினேன் என்று நினைக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் சில போட்டிகளில் ஆட்டம் மாறிவிடும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேவையாக இருக்கும். அதேபோல் எனது ஸ்ட்ரைக் ரேட் பற்றி விவாதங்கள் எழலாம்’’ என்றார். தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “இன்று நடந்ததை பற்றி என்னால் தற்போது விவரிக்கவே முடியவில்லை. அப்படித்தான் நான் உணர்கிறேன். முதலில் ஆடுகளத்தை பார்த்து நாங்கள் ஏமாந்துவிட்டோம். ஆடுகளம் எப்படி செயல்பட போகிறது என்பதை நாங்கள் கணிக்க தவறிவிட்டோம். பவர் பிளேவில் நாங்கள் அபார தொடக்கத்தை கொடுத்தோம். ஆனால் அந்த அடித்தளத்தை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொண்டு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. கள சூழலை நாங்கள் கணிக்க தவறியது இதற்கு காரணம் என நினைக்கின்றேன். பவர் பிளே முடிந்தவுடன் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் தலைகீழாக மாறியது. ரன்களை சேர்ப்பது இந்த ஆடுகளத்தில் மிகவும் கடினமாக இருந்தது.

சிஎஸ்கே அணி இந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சரியான திட்டத்தை தீட்டி அதற்கு தகுந்தார் போல் செயல்பட்டார்கள். முதல் பந்தில் இருந்தே இங்கு அதிரடியாக ஆடுவது என்பது முடியாத விஷயம். நாங்கள் நல்ல நிலையில் தான் பேட்டிங் செய்யும்போது இருந்தோம். இந்த ஆடுகளத்தில் 160 அல்லது 170 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது.ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் சரியாக விளையாட முடியவில்லை. தோல்வி குறித்து அணி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். நல்ல வேலை இந்த தோல்வி சீசனின் தொடக்கத்திலே அமைந்துவிட்டது. மீண்டும் எங்களுடைய சொந்த மைதானத்திற்கு சென்று அங்கு உள்ள கள சூழலை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம். கள சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடுவதில் தான் வெற்றி அமைந்திருக்கிறது’’ என்றார்.

The post தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது நெகிழ்ச்சியாக இருந்தது: கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dhoni ,Rudhuraj Gaekwad ,Chennai ,CSK ,Ruduraj Gaekwad ,KKR ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது