- மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
- Kolagalam
- விருதுநகர்
- விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்
- விருதுநகர் பரசக்தி மாரியம்மன் கோயில் புங்குனி பொங்கல் திருவிழா
- விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி
- மாரியம்மன் கோயில் புங்குனி திருவிழா
*விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலம்
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை துவங்கி இருதினங்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் கோயில் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.நேற்று முன்தினம் மாலை முதல் மாவிளக்கு எடுத்தல், உருவபொம்மைகள் வாங்கி வைத்தல், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்தல், தீச்சட்டி, ரதம் இழுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீச்சட்டி, குதில் சட்டி, 21, 51, மற்றும் 101 தீச்சட்டி, ரதம் இழுத்தல், பறவை காவடி, வேல் குத்துதல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் செலுத்தினர்.சுற்றுப்பகுதி கிராம மக்கள் நேற்று முன்தினம் துவங்கி இரு தினங்கள் விடிய, விடிய தீச்சட்டி எடுத்து கூட்டம், கூட்டமாக வந்ததால் நகரின் முக்கிய வீதிகள் மக்கள் வெள்ளமாக காட்சி தந்தது. இன்று மாலை 5.06 மணிக்கு அம்மன் கோயில் திடலிருந்து நகரின் ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
சிவகாசி: சிவகாசியில் இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலிலும் திருத்தங்கல்லில் எட்டு சமூகத்தார் உறவின்முறை பொதுமகமைப்பண்டு சார்பாக கொண்டாடப்படும் மாரியம்மன் கோயிலிலும் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவான நேற்று கயர்குத்து திருவிழா நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கயிறு குத்தி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகாசி மாரியம்மன் கோயிலில் குவிக்கப்பட்டிருந்த வேப்பிலையில் உருண்டு அம்மனை தரிசித்தனர். உடலில் கயர்குத்தியும், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்திவந்து அம்மனை வணங்கினர். விடிய விடிய திருவிழா நடைபெற்றது.
சிவகாசியில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்து அரிசிக் கொட்டகை மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.ஸ்ரீவில்லி: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழி திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, நிர்வாக அதிகாரி தேவி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
The post மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.