×

கே.வி.குப்பம் அருகே நள்ளிரவு பரபரப்பு ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ₹7.19 லட்சம் சிக்கியது

*வாக்காளர்களுக்காக பதுக்கலா? என அதிகாரிகள் விசாரணை

கே.வி.குப்பம் : கே.விகுப்பம் அருகே தேர்தல் பறக்கும் படை போலீசார், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.7.19 லட்சம் சிக்கியது. ஓட்டுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் தருவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜன்(75) என்பவர், வட்டிக்கு பணம் கடன் கொடுக்கும் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி விமலா(65). இவர்களது 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், வீட்டில் தம்பதியினர் மட்டும் வசித்து வருகின்றனர்.

விவசாயி நடராஜன் வீட்டில் வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய அரசியல் கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படையினர் மற்றும் போலீசார், இரவு 7 மணியளவில் அவரது வீட்டை சோதனையிடச் சென்றனர்.

அப்போது நடராஜன், அவரது மனைவி விமலா வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். மேலும், வீட்டில் உள்ள மின் விளக்குகளையும் அணைத்துவிட்டனர். இதற்கிடையில் அங்கு வந்த கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் மற்றும் போலீசார் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. தொடர்ந்து, தாசில்தார் சந்தோஷ், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி, சப்-கலெக்டர் சுபலட்சுமி, டிஎஸ்பி ரவிச்சந்திரன், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அதுவரை பறக்கும்படையினர் அங்கேயே காத்திருந்தனர். தொடர்ந்து நள்ளிரவு அதிகாரிகள் மாடி வழியாக சென்று, அங்கிருந்த கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். இதற்கிடையில் மாடியில் சிதறிக்கிடந்த ரூ.2.19 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது பதற்றத்தில் இருந்த நடராஜன், விமலா தம்பதியினர் ‘எப்படி வீட்டுக்குள் வரலாம்’ என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.7.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கே.வி.குப்பம் அருகே நள்ளிரவு பரபரப்பு ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ₹7.19 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,K.Vikuppam ,Election Flying Squad ,
× RELATED ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்