×

பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா இருமொழி கொள்கைக்கு கவர்னர் ஆதரவு அளிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி நேரடி கோரிக்கை

திருச்சி: ‘‘இருமொழிக் கொள்கைக்கு தமிழக கவர்னர் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் நேரடியாக கோரிக்கை வைத்தார்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் 2,225 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  பேசுகையில், ‘‘பாரதிதாசனும், அவரது வழிகாட்டி பாரதியாரும் கல்வி குறித்து என்ன கனவு  கண்டனரோ அதை நினைவாக்கும் வகையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் புதிய  கல்வி கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பழைய முறையில்  எப்படி கல்வி முறை இருந்ததோ, அதற்கு தகுந்தாற்போல கல்வியை மீண்டும்  உருவாக்கும் விதமாக இந்த புதிய கல்வி கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது கல்வி முறையில் உள்ள  பல்வேறு தடைகற்களை தகர்த்தெரியும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது.  மாணவர்கள் புதிய சிந்தனையில் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்’’ என்று கூறினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி பேசுகையில், சங்க காலம் திரும்பி கொண்டிருக்கிறது. சங்க காலத்தில் ஆண், பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில் ஏற்பட்ட கலாச்சார படையெடுப்பால் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என மாறியது. தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. தமிழக முதல்வர், அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என அறிவித்துள்ளார். தமிழக அரசு, உயர்கல்வியை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு இருமொழி கொள்கை அவசியம். மூன்றாவது மொழி தேவை என்றால் படிக்கலாம். கட்டாயப்படுத்தக்கூடாது, திணிக்கக்கூடாது. இரு மொழி கொள்கைக்கு தமிழக கவர்னர் ஆதரவு அளிக்க கோரிக்கை வைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு மாநில வளர்ச்சி முக்கியம்.மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம். பயிற்சியுடன் கல்வி மிக முக்கியம். உலக வளர்ச்சிக்கும், நூற்றாண்டின் தேவைக்கும் கல்வி மாற்றம் வேண்டும் என்பது இயற்கை என்றார்.தமிழில் பேசிய கவர்னர்பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு தமிழில் ஒன்று கூற விரும்புகிறேன் எனக்கூறி தமிழில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘‘பெரிதாக சிந்திங்க, பெரிதாக கனவு காணுங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க, தன்னம்பிக்கையோடு இருங்க. அப்படி செய்தால் உலகம் உங்கள் வசமாகும்’’ என்றார்….

The post பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா இருமொழி கொள்கைக்கு கவர்னர் ஆதரவு அளிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி நேரடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bharatidasan University Graduation Festival ,Governor ,Minister ,Ponmudi ,Trichy ,Higher Education ,University Graduation Festival ,Tamil ,Nadu ,Bharadidasan University Graduation Festival ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...