×

முறைப்படுத்தல் சட்டத்திலிருந்து விலக்கு கோரும் சிறுபான்மை பள்ளிகளின் விண்ணப்பங்கள் மீது முடிவு: அரசுக்கு ஜூன் 25 வரை ஐகோர்ட் அவகாசம்

சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டத்தில் இருந்து விலக்களிக்க கோரி சிறுபான்மை பள்ளிகளின் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஜூன் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், இந்த விதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், வழக்கறிஞர் மேரி சவுமி ரெக்ஸி உள்ளிட்டோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் வாதிடும்போது, தமிழ்நாடு அரசின் சட்டத்தில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்களிப்பது குறித்து முடிவெடுக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விலக்களிக்க கோரி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் தமிழக அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது சாதகமாக அரசு முடிவெடுத்தால் இந்த வழக்குகள் செல்லாததாகி விடும் என்று வாதிட்டார். அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறுபான்மை பள்ளிகளின் விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன. மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதை அறிவிக்க முடியாது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க அரசுக்கு ஜூன் 25 வரை அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post முறைப்படுத்தல் சட்டத்திலிருந்து விலக்கு கோரும் சிறுபான்மை பள்ளிகளின் விண்ணப்பங்கள் மீது முடிவு: அரசுக்கு ஜூன் 25 வரை ஐகோர்ட் அவகாசம் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...