×

ஓபிஎஸ் வாகனத்தில் மீண்டும் சோதனை: எம்பி காரிலும் சல்லடை

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சுயேச்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர், நேற்று முன்தினம் தங்கச்சிமடத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு இரவு 10.30 மணிக்கு மேல் ராமநாதபுரம் திரும்பினார். அப்போது மண்டபம் அருகே உள்ள ராமநாதபுரம் – ராமேஸ்வரம் சாலையிலுள்ள சுந்தரமுடையான் எனுமிடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த ஓபிஎஸ்சின் பிரசார வேனை சோதனையிட்டனர். இதற்கு வேனிற்குள் இருந்த தொண்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் வேன், எம்பி தர்மர் கார் உள்ளிட்டவர்களின் வாகனங்களிலும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் இல்லாததை தொடர்ந்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

* தம்பி நீங்க துபாயா? கூலிங் கிளாசை போடுங்க: – ஓபிஎஸ்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், செம்படையார்குளம் கிராமத்தில் ஓபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கோட்டு, சூட் பேண்ட், கழுத்தில் டை, கண்களுக்கு கூலிங் கிளாஸ் சகிதமாக தொண்டர் ஒருவர் வந்தார். ஓபிஎஸ் பிரசார வாகனம் முன்பு நின்ற அவர், தான் துபாயிலிருந்து வந்திருப்பதாகவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ஓபிஎஸ், ‘தம்பி துபாயில் இருந்தா வந்திருக்கீங்க, வெயில் அடிக்குது… உங்க கூலிங் கிளாசை போடுங்க’ என சிரித்தப்படி கூறி, அங்கு கூடியிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

* அதிமுகவுக்கு ஓட்டு போட்டு உங்க வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அன்புமணி அட்வைஸ்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக, பாமக தலைவர் அன்புமணி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாலக்கோடு தொகுதியின் 5 முறை சட்டமன்ற உறுப்பினர், 3 முறை அமைச்சராக இருந்தும், கே.பி.அன்பழகன் தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்?. தேர்தல் நேரத்தில் உங்களுக்கு வந்து ரூ.500, ரூ.1000 கொடுத்தார். திருமணம், காரியத்திற்கு முதல் ஆளாக வருவார்.இவையெல்லாம் அப்பட்டமான நாடக அரசியல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, 5 ஆண்டுகளாக நான் இங்கு செல்லாத கிராமம் இல்லை. தொகுதியை சுற்றிச் சுற்றி வந்தேன். நான் தொகுதிக்கு வந்த பின் தான், எனக்கு பல பிரச்னைகள் புரிந்தது. அதிமுக தொண்டர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். அதிமுக தமிழ்நாடு மற்றும் ஒன்றியத்தில் ஆளுங்கட்சி இல்லை. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவது இல்லை. ஆகையால், இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

* அங்க பணத்த கொடுத்துட்டு இங்க அண்ணாமலை போன் போட்டு சிக்க வைத்துவிட்டார்: மன்சூர் அலிகான் லக… லக…
வேலூரில் மன்சூர்அலிகான் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 34 வருடங்கள் எந்த அரசு பதவியிலும் அதிகாரத்திலும் அந்தக் குடும்பம் இல்லை. ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தான் பிரதமராக வரவேண்டும். இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரசாந்த் கிஷோர் ஏதோ வன்மத்தில் பேசுகிறார். இது தெளிவாக தெரிகின்றது. அவர் கூற்று ஏற்படுவது அல்ல மடத்தமானது. ரூ.4 கோடி பணம் பறிமுதலில் அங்கே கொடுக்க வைத்து இங்கே அண்ணாமலை போன போட்டு புடிக்க வைத்து விட்டார். அண்ணாமலைக்கு அதுதானே வேலை. எக்கேடோ கெட்டுப் போகட்டும், இந்த தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை. மக்களிடம் எனக்கு அமோக வரவேற்பு உள்ளது’ என்றார்.

* தீயசக்தி பாஜ, அதிமுகவுக்கு பூசணிக்காய் உடைப்பு
வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் மன்சூர் அலிகான் நேற்று வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர், மன்சூர் அலிகானிடம் தேர்தல்ல ஜெயிச்சு என்ன பண்ண போறீங்க என கேட்டார். அதற்கு மன்சூர்அலிகான்,‘நானே பெரிய வில்லன் தான். அரசியலுக்கு வருபவர்கள் கொள்ளையடிக்க தான் வராங்க. நானும் கொள்ளையடிக்க தான் போறேன். ஜெயிச்சேன்னா மோடியை சந்திப்பேன். சென்னையில் பிடிபட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது தான். சினிமா தயாரிப்பாளர்கள் எனக்கு கொடுக்க வேண்டிய பணம் தான். என்னுடைய வண்டியில் ரூ.100 கோடி பணத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். இதுவரை எந்த தேர்தல் அதிகாரியும் என் வண்டியை சோதனை செய்யவில்லை,’ என்றார். இதைகேட்ட மூதாட்டி மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பூசணிக்காயை வாங்கிய அவர், ‘இன்று (நேற்று) அமாவாசை என்பதால் தீய சக்தியான பாஜ மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான்தான் வெற்றி பெறப் போகிறேன்,’ எனக்கூறி பூசணிக்காயை உடைத்தார்.

* சமூகநீதிக்கு எதிரானது பாஜ: புதுவை முதல்வர் சுயமரியாதையோடு இருக்கிறாரா?: முத்தரசன் கேள்வி
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று தொகுதி வாரியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முத்தரசன் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி மாநில முன்னேற்றத்துக்காக பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். புதுச்சேரி மாநில அந்தஸ்து உள்பட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றி தருவார். இந்த தேர்தல் என்பது இந்தியா ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும். இது தேர்தல் யுத்தம்.
கடந்த முறை மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவில்லை. முதல்வர் ரங்கசாமி மனதில் கையை வைத்து சொல்லட்டும். உண்மையில் சுய மரியாதையோடு முதல்வராக இருக்கிறீர்களா?. அப்படி சுயமரியாதையோடு இயங்க முடியாத நெருக்கடியில் உள்ளார். பதவியைவிட சுயமரியாதை மிக முக்கியம். அதை அனைத்தும் இழந்துவிட்டு விருப்பமில்லாமல் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.எங்களது அணியை எதிர்த்து வெற்றிபெற முடியாது.
ஒன்று நள்ளிரவு கூட்டணி. ஒன்று கள்ளக் கூட்டணி. பாமக ராமதாஸ் சமூகநீதிக்காக உண்மையாக போராடுகிறார். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இவர்களுடன் சமூகநீதியை பெற முடியுமா?. சமூகநீதிக்கு நேர் எதிரான கட்சி ஒன்று நாட்டில் இருக்கிறது என்றால் அது பாஜ தான். இவ்வாறு அவர் பேசினார்.

* ரூ.5.17 கோடி தங்க நகைகள் பறிமுதல்: அரசு பஸ்சில் ரூ.30 லட்சம் சிக்கியது
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வந்த கொரியர் வேனில், உரிய ஆவணம் இல்லாமல் கொண்ட வந்த ரூ.4 கோடியே 87 லட்சத்து 717, வெள்ளி நகையின் மதிப்பு ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 32 மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஐதராபாத்தில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த கோவை பகுதியை சேர்ந்த நகை வியாபாரியான ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்ட வந்த ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 62.5 பவுன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஓபிஎஸ் வாகனத்தில் மீண்டும் சோதனை: எம்பி காரிலும் சல்லடை appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,O. Panneerselvam ,BJP ,National Democratic Alliance ,Ramanathapuram ,Thangachimadam ,Mandapam ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்