×

சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் நடந்த சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் டேனியல் காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (26 வயது, 11வது ரேங்க்) மோதிய காலின்ஸ் (30 வயது, 22வது ரேங்க்) 6-2, 6-1 என நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சமீபத்தில் நடந்த மயாமி ஓபனிலும் காலின்ஸ் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மயாமி ஓபன் வெற்றியின் மூலம் தரவரிசையில் 31 இடங்கள் முன்னேறி 22வது இடத்தை பிடித்த காலின்ஸ், இப்போது மேலும் 7 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக 2022ல் 7வது இடத்தை பிடித்திருந்தார். நடப்பு சீசனுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பிறகு, காலின்ஸ் 2 தொடர்களில் சாம்பியனாகி அசத்தியுள்ளார்.

\

அதிக வயதில் நம்பர் 1
* செர்பிய வீரர் ஜோகோவிச் (36வயது, 1வது ரேங்க்) ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தொடர்கிறார். அதிக வயதில் முதலிடத்தில் நீடிக்கும் சாதனையை ஜோகோவிச் தொடர்கிறார். அவர் 2011 ஜூலையில் முதல்முறையாக முதலிடம் பிடித்தார். அதன்பிறகு பெடரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்), ஜோகோவிச் மூவரும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இடையில் மர்ரே (பிரிட்டன்), மெத்வதேவ் (ரஷ்யா), அல்கராஸ் (ஸ்பெயின்) சில வாரங்களுக்கு நம்பர் 1 ஆக இருந்துள்ளனர். மீண்டும் 2023 செப்டம்பர் முதல் இப்போது வரை 31 வாரங்களாக ஜோகோவிச் முதல் இடத்தில் இருக்கிறார். மொத்தத்தில் 420 வாரங்களுக்கு அவர் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார்.
* இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா (44 வயது) தொடர்ந்து 8 வாரங்களாக முதல் இடத்தில் நீடிக்கிறார். இதற்கு முன் ஜனவரியில் 4 வாரங்கள் முதல் இடத்தில் இருந்தார். அதிக வயதில் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீரர் என்ற சாதனையையும் தொடர்கிறார்.
* 38 வது ரேங்க் வீரரை வீழ்த்தினார் நாகல்
மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 38வது ரேங்க் வீரர் மேட்டியோ அர்னால்டியுடன் (23 வயது, இத்தாலி) மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் (26 வயது, 93வது ரேங்க்) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 37 நிமிடம் போராடி வென்றார். தகுதிச் சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறிய நாகல், ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் முதல் முறையாகக் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது சுற்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனியின் (7வது ரேங்க்) சவாலை சந்திக்கிறார்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Charleston Open Tennis ,Collins ,Charleston ,Danielle Collins ,Charleston Open ,US ,Russia ,Daria Kasatkina ,Dinakaran ,
× RELATED ஸ்ட்ராஸ்போர்க் டென்னிஸ் மேடிசன் கீஸ் அசத்தல்