எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியதாவது; “வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் களத்தில் நண்பர்கள், பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். எம்.எஸ். தோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். எம்.எஸ்.தோனியை போல வேறு யாராலும் அந்த இடத்தை தொட முடியும் என எனக்கு தோணவில்லை. குறிப்பாக 3 ஐ.சி.சி. கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியாது.
எனவே ஐ.பி.எல். தொடரில் தோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் தோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி பயன்படுத்துவது? பீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை பினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம்.
ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார். அதே சமயம் சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாதூரியமாக செயல்படக்கூடிய தோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும். இருப்பினும் சென்னையை வீழ்த்துவேன்” என்று கூறினார்.
The post எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன்: முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்! appeared first on Dinakaran.