- சுப்மான் கில்
- லக்னோ
- லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்
- குஜராத் டைட்டன்ஸ்
- 21வது லீக் ஆட்டம்
- ஐபிஎல் கிரிக்கெட்
- குயின்டன் டி கோக்
- தின மலர்
லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற 21 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி வீரர் குயின்டன் டிகாக் ஒரு சிக்சர் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். டேவிட் படிக்கல்லும் 7 ரன்னில் வெளியேற, கே எல் ராகுல் 31 பந்துகளில் 33 ரன் எடுத்து அவுட்டானார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன், ஆயுஸ் பதானி 11 பந்தில் 20 ரன் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். கில் 21 பந்துகளில் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய கேன் வில்லியம்சன் 1 ரன், பி.ஆர். சரத் 2 ரன், விஜய் சங்கர் 17 ரன்க, தர்ஷன் நால்காண்டே 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
கடைசியாக ராகுல் திவாட்டியா மட்டும் 30 ரன் எடுத்தார். ரஷீத் கான் உள்ளிட்டோர் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் குஜராத் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றியை பெற்றது.லக்னோ பந்துவீச்சில் யாஷ் தாக்கூர் அபாரமாக பந்துவீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.நடப்பு ஐபிஎல் தொடர் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரரான யாஷ் தாக்கூர் ஆட்டநாயகன் விருது பெற்றார். குஜராத்திற்கு எதிராக இதற்கு முன் ஆடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்திருந்த லக்னோ நேற்று முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணிக்காக தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் களமிறங்கி அபாரமாக செயல்பட்டார். அவர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் நான்கு ஓவருக்கு 29 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
எனினும் குர்னல் பாண்டியா 4 ஓவர் வீசி 11 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். தற்போது குஜராத் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. வெற்றிக்கு பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், 160 பிளஸ் ரன் இலக்கை நிர்ணயித்தும் வெற்றிபெற்றது சிறப்பானது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியமானவர்கள். சித்தார்த் பவர் பிளேவில் முக்கிய பங்கு வகிக்கிறார், என்றார். தோல்வி குறித்து குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: நாங்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினோம். ஆனால் நடு ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அதிலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கின்றேன்.
இந்த ஆடுகளத்தில் லக்னோ 170, 180 ரன்கள் எடுப்பார்கள் நினைத்தேன். ஆனால் அதைவிட குறைவாக தான் எடுத்தனர். இதற்காக எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். டேவிட் மில்லர் ஆட்டத்தை தனியாக மாற்றக்கூடிய வீரர். தற்போது எங்கள் அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அது கொஞ்சம் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த இலக்கை நாங்கள் நிச்சயம் எட்டுவோம் என நினைத்தேன். பவர்பிளேயின் கடைசி ஓவர் என்பதால் அதனை சரியாக பயன்படுத்தி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்காக அதிரடியாக ஆட முற்பட்ட போது விக்கெட்டை நான் இழந்தேன். உமேஷ் யாதவ் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் நன்றாக செயல்படுகிறார்.
The post நடு வரிசையில் அதிக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி appeared first on Dinakaran.