×

திருப்புல்லாணி அடை நெஞ்சமே

திருப்புல்லாணியில் பங்குனி பிரமோற் சவம் வெகுசிறப்பு. அவசியம் காண வேண்டியது. அதை ஒட்டி இந்த திவ்ய தரிசனக் கட்டுரை

நம்முடைய பாரததேசத்தில் நிறைய திருத்தலங்கள் இருக்கின்றன. சைவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களும் உண்டு. வைணவத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அதாவது ஆழ்வார்கள் பாசுரங்கள் பெற்ற தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் மரபு உண்டு இந்த திவ்ய தேசங்களை விதவித மாகப் பிரித்திருக்கிறார்கள். சோழநாட்டு திவ்யதேசங்கள், பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள், மலைநாட்டு திவ்ய தேசங்கள், தொண்டைநாட்டு திவ்யதேசங்கள், வடநாட்டு திவ்ய தேசங்கள் என்று பிரித்திருக்கிறார்கள். அதில் பாண்டியநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றுதான் திருப்புல்லாணி என்ற திவ்ய தேசம். அற்புதமான திருத்தலம். கடற்கரைத் திருத்தலம்.

முதலில் சேதுக்கரைக்குச் செல்வோம். இராமநாதபுரத்தில் இருந்து சேதுக் கரைக்கு நல்ல சாலை வசதி உண்டு. சாலை அதோடு முடிகிறது. கடலலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் வந்து கரையை மோதுகின்றன. வேறு எந்தச் சத்தமும் கேட்காததால் கடல் அலையின் சப்தம் மட்டுமே காதிலே விழுகிறது. திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை மூணு கிலோமீட்டர். திருப்புல்லாணி ராமநாதபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர். ஆதி சேது என்று அழைக்கப்படும் இந்த இடத்தை திருஅணை என்று அழகான வைணவ பரிபாஷையில் வழங்குகிறார்கள்.

கண்ணனின் திருவடித் தொடர்பால் வடநாட்டில் பிருந்தாவனமும் யமுனையும் பெருமை பெற்றது போல் சேதுக்கரையும் பெயர் பெற்றது. இங்கே இருந்து ராமன் இலங்கைக்கு அணை கட்டியதால் அவன் திருவடித் தொடர்பு இந்தத் தலத்துக்கு உண்டு.

இந்த இடத்திலேதான் வீபீஷணன் ராவணனை விட்டுப் பிரிந்து கட்டிய ஆடையுடன் வந்து ராமனின் திருவடிகளில் விழுந்து சரணாகதி செய்தார். அப்போது சொல்லப்பட்டதுதான் மிக அற்புதமான சரம ஸ்லோகம் என்று சொல்லப்படுகின்ற கடற்கரை வார்த்தை.
அந்த சரம ஸ்லோகம் இப்படிச் சொல்லுகிறது.
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம்மம – யுத்த – 106-53.

நான் என்னைச் சரண் அடைந்தவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவதை விரதமாகக் கொண்டிருக்கிறேன் என்று விரதம் பூண்டவர் பெருமாள். அதனால் தான் இராமாயணம் அபயப் பிரதான சாரமாக வழங்குகிறது. பொங்கி வந்து அலை மோதும் கடற்கரையில் அழகான அனுமன் சந்நதி இருக்கிறது. இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஜெய வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம்.ராமசேதுவையும் ராமசிந்தனையும் எண்ணிஎண்ணி விழிகள் இமைக்காது நின்ற கோணத்தில் கடலை நோக்கி காட்சி தந்து கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர்.

ஒவ்வொரு புதன், சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இவருக்கு வடைமாலை சாற்றி அபிஷேகம் அலங்காரம் செய்து வணங்குகிறார்கள். பரிகார ஹோமங்கள், முன்னோர் வழிபாடு முதலிய காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கென்றே இடங்கள் உண்டு. வேன் களிலும் கார்களிலும் மக்கள் வந்து இறங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இங்குள்ள கடல், “ரத்னாகர தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்சவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இங்கு வணங்காமல் திருப்புல்லாணி திவ்ய தேச யாத்திரை நிறைவடையாது இந்த ஆதி சேதுக்கரையில் நின்று கொண்டிருந்த போது அழகான திருமங்கை ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது.

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்த வா நமக்கு
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே.

எம்பெருமான் மீது காதல் கொண்டு கவி பாடுபவர்கள் ஆழ்வார்கள். ஒரு கோலைப் பற்றிக்கொண்டு கொடி படர்வது போல இவர்கள் மனம் எப்பொழுதும் மாலை (திருமாலைப்) பற்றியே சுழன்றுகொண்டிருக்கும். அவர்களுக்கும் நமக்கும் உள்ள பக்தி வித்தியாசம் இதுதான்.

நாம் எப்போதாவது எம்பெருமானை நினைப்போம். அவர்கள் எப்பொழுதும் எம்பெருமானை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.திருமங்கை ஆழ்வாருக்குச் சில நேரங்களில் பிரேம பாவம் வந்துவிடும். அப்போது அவருக்குப் பெண்தன்மை வந்துவிடும். பரகாலன், பரகால நாயகி ஆகிவிடுவார். திருப்புல்லாணி எம்பெருமானை நினைத்துப் பாடும் பாசுரத்தில் நாயகி பாவம் வந்துவிடுகிறது. “எம்பெருமானே, வேதத்தைப் படைத்தாய். வேள்வியைப் படைத்தாய். விண்ணைப் படைத்தாய்.

சூரிய சந்திரர் எனும் இரண்டு சுடர்களைப் படைத்தாய். இவ்வளவு காரியங்களும் நிகழ்த்துகிறாய். இதெல்லாம் நாங்கள் கேட்காமலே உன் கருணையின் மிஞ்சிய தன்மையைக் காரணமாகக் கொண்டு படைத்தாயே, அப்படிப் படைக்கப்பட்ட உன்னையே நினைத்து கொண்டிருக்கும் அடியேன் படும் துன்பத்தைப் பார்த்தாயா? இப்பொழுது நான் உன்னுடைய அருளைப் பெற கை தொழுதபடி இந்தக் கடற்கரையில் (சேதுக்கரையில்) நிற்கிறேனே, நீ முகம் கொடுக்காமல் இருக்கிறாயே, நன்றாக இருக்கிறது நீ அருள் செய்யும் முறை.

உன் அருளை நினைத்து நினைத்து நான் தூங்காது இரவெல்லாம் தவித்து நின்றேன். இரவெல்லாம் உறங்காது எனக்குத் துணையாக இருந்தது எது தெரியுமா? ஆர்ப்பரிக்கும் இந்தக் கடல்தான். இந்தக் கடலைத் துணையாக வைத்துவிட்டு நீ போய் திருப்புல்லாணியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய். ஊருக்கெல்லாம் படியளக்கும் அரசன் அந்தப்புர மகளிரை பட்டினி போட்ட கதையாக இருக்கிறது நீ அருள் கொடுக்கும் நிலை’’

அழகான கடற்கரையைப் போலவே அழகான தமிழ். அற்புதமான உவமை. தன்னுடைய எண்ணத்தை வண்ணத்தில் வடித்திருக்கிறார் திருமங்கை ஆழ்வார். திருமங்கையாழ்வாரின் தமிழோடு சேதுக்கரையை அனுபவித்துவிட்டு திருப்புல்லாணி திருத்தல கோபுர வாசலிலே நுழையலாம். அழகான ராஜகோபுரம். அகலமான பிரகாரங்கள். வாயில் கோபுரத்தின் அருகே உள்ள வாசலை கொடை முறை வாசல் என்கிறார்கள். ஆதி ஜெகந்நாதரின் கொடிமரமும் பலிபீடமும் தரிசித்துவிட்டு உள்ளே நுழைய ஒரு அழகான மண்டபம்.

தாயார் சந்நதிக்கு எதிரில் ஒரு மண்டபம் உள்ளது. அதன் இரு பக்கத்து கற்கம்பங்களில் சேதுபதிகளின் அழகிய வடிவங்களைக் காணலாம். சேதுக்கரையையும் திருப்புல்லாணி திவ்ய தேசத்தையும் அறங்காவலர்களாக இருந்து காப்பவர்கள் அல்லவா அவர்கள்.வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் இருக்கிறது. இதற்கு திரு அத்தியயன உற்சவ மண்டபம் என்று பெயர். பெருமாள் வைகுண்ட ஏகாதசியின் போது இங்கு வேத, திவ்ய பிரபந்த பாராயணத்தை கேட்டருளுவார். மூன்றாம் பிரகாரம் வடக்கில் பரமபத வாசல். கீழ்பகுதியில் அழகான பட்டாபிராமர் சந்நதி.

இனி தாயார் சந்நதிக்குள் நுழைவோம் அருளே ஒரு வடிவாக, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ பத்மாசனித்தாயார் அருளும் அபயமும் வழங்கும் திருக்கரங்களோடும், சிரிக்கும் முகத்தோடும் காட்சி தருகிறார். இத்தாயாரின் அருள் இன்றி ஆன்மாவுக்கு ஏதுகதி? பொதுவாக பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

தாயார் சந்நதியின் மேற்குப் பக்கம் தல மரம் உள்ளது. பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’’ எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத் தலத்தின் விருட்சமாகும். பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாகக் கருதி வழிபடுகிறார்கள். திவ்யமான இத்தல விருட்சத்தையே ஆதி யுகத்தின் அஸ்வத்த நாராயணனின் அவதாரமாகக் கூறுகிறார்கள்.

ஆதியில் படைப்புத்தொழிலை தாமே செய்து வந்த பரம்பொருள், பிறகு பிரம்மனிடம் சிருஷ்டி தொழிலை ஒப்படைத்தார். சிருஷ்டியைத் துவங்க தெற்கு நோக்கிப் புறப்பட்டார் பிரம்மா. அப்போது ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதி ஒன்று தோன்றி மறைவதைக் கண்டார். அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்தபோது, அதுவே போத ஸ்வரூபமான போதிமரம். அந்த மரத்தடியில் தான் ஜகந்நாதன் தங்குகிறான் என்று அசரீரியாய்ப்பதில் கிடைத்ததாம்.

இனி, ஆண்டாளையும், வடக்கு பிரகாரத்தில் உள்ள சயனராமன், பட்டா பிராமனையும் சேவித்து ஸ்ரீ ஆதி ஜகன்நாதரின் சந்நதிக்குள் நுழைவோம். வடக்கே ஒரு ஜெகந்நாதர் உண்டு என்பதால் இவரை தட்சண ஜெகந்நாதர் என்கிறார்கள்.இத்தலத்தின் சிறப்பு மூன்று பெருமாள்கள் தனித்தனி பிரகாரங்களுடன் எழுந்தருளியிருப்பது. ஆதி ஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமரப் பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

ஆதி ஜெகநாதப் பெருமாள் அர்த்த மண்டபத்தின் கருவறையில் தேவிமார்களுடன் காட்சி தருகிறார். அன்ன உருவம் எடுத்து வேதங்களை உலகுக்கு அளித்த உற்சவர் ஸ்ரீ கல்யாண ஜெகந்நாதன் உபய நாச்சிமார்களுடன் தரிசனம் தருகிறார். தமிழில் இவருக்குத் தெய்வச் சிலையார் என்ற திருநாமம். தாயாருக்கு கல்யாணவல்லி என்ன அழகான பெயர்! நம் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் இப்படிப் பெயர் வைக்கலாமே புல்லவர், கண்வர், சமுத்திர ராஜன், வீடணன் போன்ற பலரும் இத்தலத்தில் எம்பெருமானை சரண் புகுந்ததால் இத்தலத்தைச் சரணாகதித் தலம் என்று பெருமையோடு வழங்குகிறார்கள்.

‘‘பவ்வத் திருஉலவு புல்லாணி கை தொழுதேன், தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே’’

என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம்.இவர்களைச் சேவித்துவிட்டு அடுத்து ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் சந்நதிக்குள் நுழைவோம். புஷ்பக விமானம் என்ற பெயர் கொண்ட விமானத்தின் நடுவே பெருமாள் தர்ப்பைப்புல்லில் (புல்அணை) காட்சி தருகிறார். வடக்கு திருச்சுற்றில் பெருமாளின் திருவடிப் பாதுகைகள் வைக்கப்பட்டிருக்கும். அப்பாதுகைகளை வணங்கினாலே சகல பாவங்களும் தீரும். இந்த ராமனை சுவாமி தேசிகன் ‘‘பிரதிசயன பூமிகா பூஷித பயோதி புளின’’ என்று மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

கருங்கடல் ஒரு பக்கம். கருணையின் கடலான எம்பெருமான் ஒரு பக்கம்.பிள்ளையிடம் 100 ரூபாய் வழங்கிவிட்டு பெற்றவன் அவனிடமே 10 ரூபாய் கேட்டு நிற்பது போல கடல் அரசனிடம் எம்
பெருமான் சரணாகதி செய்தானே! கருணையாலும் அன்பினாலும் தாழும் போது உலகம் அவனை வலிமையும் திறமையும் அற்றவனாக அல்லவாகருதிவிடுகிறது.சரணாகதி செய்த ராமன் அது பலிக்காத போது, வீர ராமனாக வில்லில் அம்பை பூட்டி நானிலம் நடுங்க, நாண் ஓசை செய்த பின் அல்லவா கடலரசன் வந்து காலில் விழுந்தான். கருணைக் கடலுக்குக் கூட சில நேரம் கடுமை வேண்டி இருக்கிறதே!

சந்நதியில் நிற்கும் போது வான்மீகியும் கம்பனும் போட்டி போட்டுக்கொண்டு சிந்தையில் நிற்க, தர்ப்பசயன ராமன் காட்சி தரும் கோலத்தைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அடுத்த சந்நதி பட்டாபிராமர் சந்நதி. இது தர்ப்ப சயன ராமன் சந்நதிக்கு முன்பக்கம் பலிபீடம் கொடிமரத்தோடு இருக்கிறது.

ராமன் ராவணனை வதம் செய்து புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகையில் சீதா தேவியுடன் இங்கு சற்று தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்கிறது தலபுராணக் குறிப்பு.
சேது ஸ்தானம் செய்துவிட்டு பட்டாபிராமனை தரிசிக்க ஆயிரம் ஆயிரம் புண்ணிய பலன் உண்டு, சேது தர்சனம் இதம் புண்யம் சேஷே நாபி நகண்யதே என்று ஒரு வாக்கியம்.

அதாவது, சேதுவைத் தரிசனம் செய்தால், செய்தவர்களுக்கு ஏற்படும் புண்ணியத்தை ஞானம் பலம் கொண்ட ஆதிசேஷனாலும் எடுத்துரைக்க முடியாது என்பது பொருள்.
இத்தலத்தில் சந்தான கோபாலம் சந்நதி அவசியம் காண வேண்டிய ஒன்று.எத்தனைதான் விளக்கினாலும் இத்தலத்தை ஒருமுறை சேவித்தால் அன்றி ஜென்மம் சிறப்படையாது. அவசரமின்றி நிதானமாக சேவிக்கும் அவகாசத்துடன் ஒருமுறை திருப்புல்லாணி வாருங்கள்.

இனி சில தலக் குறிப்புகள்

* இராமாயண காலத்திற்கும் முற்பட்ட தலம். ராமரே இப்பெருமாளை தசரதனும் இராமனும் வணங்கியதால் இப்பெருமாளுக்கு பெரிய பெருமாள் என்ற திருநாமம் உண்டு.

*ஆதி ஜெகன்னாதரிடம் ராமபிரான் அருமையான வில்லினைப் பெற்றாராம்.

3. பகவான் வைகுண்டத்தில் இருந்து பொன்மயமான ஒரு அரசமரமாக (அஸ்வத்த நாராயணன்) அவதரித்தார்.

* வால்மீகி ராமாயணம், துளசி இராமாயணம், மகாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற பழம்பெரும் நூல்களில் இத்தலத்தின் குறிப்புகள் உண்டு.

* தெய்வாம்சம் பொருந்திய இத்தல மரத்தடியில் நாகப்பிரதிஷ்டை செய்து பால் பாயசம் அருந்த புத்திரப் பேறு உண்டாகும். இங்கு ஏராளமான நாகப்பிரதிஷ்டைகள் காணலாம்.

* இங்குள்ள அஸ்வ மரத்தை ஒரு முறை தரிசித்தவுடன். பெருவயிறு, கண்டமாலை, உதரவலி, அண்டவாயு, பிரமிய கிரந்தி, சூலை, தல நோவு, இருமல், தத்த வாயு, குருகு, செவிடு, சொல் ஊமை இவையொடு பழவினைகளும் தூர ஓடுமாம்.

* திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் இத்தலச் சிறப்பைப் பாடியிருக்கிறார்கள்.

* புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச் சிலையார் துதி, வாசனை மாலை, நலுங்கு போன்ற பல நூல்கள் இத்தலத்தின் பெருமையைப் பேசும்.

* இங்குள்ள புஷ்கரணியான சக்ர தீர்த்தத்தில் பல ரசாயன சத்துக்கள் உள்ளன. “திரு அணை கண்டால் அருவினை இல்லை” என்பது இத்தலத்தின் பெருமை பேசும் பழமொழி.

* பெருமாளுக்கு, பங்குனியிலும், பட்டாபிராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

* பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் கைந்நிலை பாடிய புலவர் புல்லங்காடர் இங்கு பிறந்தவர்.

* அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது.

* காசி, ராமேஸ்வர தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதுக்கரையில் தீர்த்த நீராடி யாத்திரையை முடிக்கின்றனர்.

* ராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.

முனைவர் ஸ்ரீ ராம்

The post திருப்புல்லாணி அடை நெஞ்சமே appeared first on Dinakaran.

Tags : Nejmeme ,Panguni Pramor Savam ,Tirupullani ,Bharatadesh ,Saiva ,Vaishnava ,
× RELATED மண் புழு உரம் தயாரிப்பு விழிப்புணர்வு