×

வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

*தபால் வாக்கு செலுத்தினர்

கோவை : கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 3096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு 15,806 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தலின்போது, கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபேட் ஆகியவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் அறிந்து கொள்வதற்காக நான்கு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கோவை பாராளுமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால், 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, இயந்திரங்களை கையாளுவது எப்படி? என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நேற்று பயிற்சி நடந்தது.

இதில், 3,096 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய தேர்தல் நடத்தும் அலுவலர்களான 15 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது வாக்குச்சாவடியில் ஒரே நேரத்தில் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதால் அதை எப்படி கையாள வேண்டும். அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?. வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு வாக்குச்சாவடியில் வைக்க வேண்டும்?. ஒரு வாக்காளர் வாக்களித்ததும், அடுத்த வாக்காளர் வாக்களிக்க என்ன மாதிரியான வகைகள் செய்ய வேண்டும்? என்பது உள்பட வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மண்டல அளவிலான அதிகாரிகள் பயிற்சி அளித்து விளக்கினர்.

மேலும், பயிற்சி மையங்களில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை, 4ம் நிலை அலுவலர்கள் அமரக்கூடிய இடம், அவர்களுக்கான பணிகள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வி.வி.பேட் கருவிகளையும் கட்டுப்பாட்டு கருவிகளுடன் பொருத்தும் பணிகள், அவற்றின் செயல்பாடு குறித்து வீடியோ மூலமாக ஒளிபரப்பப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

இந்நிலையில், இந்துஸ்தான் கலை அறிவியில் கல்லூரியில் நடந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் தங்களது வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, 11 பயிற்சி மையங்களில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த அலுவலர்கள் தங்களின் தபால் வாக்குகளை செலுத்தினர். தபால் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசையாக தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தபால் வாக்குப்பதிவு வீடியோ கேமரா மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. அதேபோல், தபால் வாக்குப்பதிவையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சொந்த பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குசாவடியிலேயே இவிஎம் இயந்திரம் மூலமாகவே வாக்குகளை செலுத்த ஏதுவாக தேர்தல் பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது மறுபயிற்சி வகுப்பு வரும் 13-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பிலும் வாக்கு செலுத்த தவறிய வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிற அலுவலர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் ஆகியோர் தங்களின் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பிரத்யேக மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தின் மூலம் தபால் வாக்கினை செலுத்தலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pollachi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...