×
Saravana Stores

போடி பகுதியில் கொடிக்காய்புளி சீசன் துவக்கம்

*கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது

போடி : கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொடிக்காய்புளி பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.400 வரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இரவு நேரங்களில்கூட வீடுகளில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் மிக அதிகமாக உள்ளதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் மக்கள் கோடை சீசனில் அதிகம் விளையும் தர்பூசணி பழங்களை வாங்கி ருசிக்கின்றனர். இதேபோல பதநீர், நுங்கு, இளநீர், கரும்புச் சாறு, மோர், கூழ் வகைகள், நன்னாரி சர்பத் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் களைகட்டியுள்ளது.

இதற்காக தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. இவற்றை வாங்கி பருகி மக்கள் தங்களது தாகத்தை தணித்துக்கொள்கின்றனர். கோடை காலத்தில் உடல்நலம் காக்க ஒரு மனிதன் குறைந்தது 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மற்றொருபுறம் பழச்சாறு பருக வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதன்மூலம் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.

கோடை காலத்தையொட்டி மருத்துவ குணமுள்ள கொடிக்காய்புளி சீசனும் தற்போது தொடங்கியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் தோப்புகள், விவசாய நிலங்களில் ஊடுபயிராக கொடிக்காய்புளி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மானாவாரி, வறட்சி பகுதிகளிலும் கொடிக்காய்புளி விவசாயம் நடைபெறுகிறது. இந்த மரங்களில் கொடிக்காய்புளி காய்கள் தற்போது கொத்து, கொத்தாக காய்த்து தொங்குகின்றன. தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே கொடிகாய்ப்புளி விற்பனை தற்போது களைகட்டியுள்ளது.

இதுகுறித்து போடியை சேர்ந்த வியாபாரி கூறுகையில்,“அடுத்த 3 மாதங்களுக்கு கொடிக்காய்புளி சீசன் தொடரும். போடி பகுதியில் கொடிக்காய்புளி விளையும் நிலையிலும் அது தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்தும் கொடிக்காப்புளிகளை கொள்முதல் செய்து வந்து தள்ளுவண்டிகளில் விற்கப்படுகிறது.

மேலும், பழக்கடைகளிலும் குவித்து வைத்து விற்கப்படுகிறது. வயிற்று வலி, செரிமான பிரச்னைகளுக்கு கொடிக்காய்புளி மிகவும் சிறந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்தது. மருத்துவம் குணம்கொண்ட கொடிக்காய்புளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்ணுகின்றனர். தற்போது கொடிக்காய்புளி தரத்துக்கேற்ப ஒரு கிலோ ரூ.360 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. விலை அதிகம்தான் என்றபோதும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்’’ என்றார்.

The post போடி பகுதியில் கொடிக்காய்புளி சீசன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : codikaipuli ,Bodi ,Kodikaipuli ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்றவர் கைது