×

சிஏஏ சட்டத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும்தான் மோடி வகையறாவை தோற்கடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

ஊத்துகோட்டை அருகே தாமரைபாக்கத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் சம்பத் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டார தலைவர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு காலமாக பாஜவின் அடிமையாக செயல்பட்டு விட்டு, இப்போது பாஜவை பழனிசாமி விமர்சனம் செய்கிறார் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா. கூட்டணி தர்மம் என்பது பாஜவிற்கு ஜால்ரா போடுவதல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தின் போது அதிமுக உறுப்பினர்களும், பாமக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்து இருந்தாலே அந்த சட்டம் வந்திருக்காது.

அத்தகைய பாவத்தை செய்தவர்கள் தான் அதிமுகவும், பாமகவும். எடப்பாடி பழனிசாமி பாஜவை எதிர்ப்பது உண்மை என்றால் தேர்தலுக்குப் பிறகு பாஜவை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல தயாராக இருக்கிறாரா. நாடாளுமன்ற தேர்தலில் தப்பி தவறி பாஜ வெற்றி பெற்று விட்டால், இந்தியாவில் நடைபெறுகின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். மோடியை பொறுத்தவரை 12 ஆண்டுகள் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தார், 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த 22 ஆண்டுகளில் ஒரு முறையாவது பத்திரிகையாளரை சந்தித்திருக்கிறாரா, இந்தியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர் மோடி தான். ஏன் சந்திக்க விரும்பவில்லை என்றால் நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ் வழிகாட்டுகிறது. 1948ம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தியை படுகொலை செய்தார்களே. சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே.

காந்தியை சுட்டுக்கொன்ற அந்த சித்தாந்தம் தான், அந்தக் கொள்கைதான் மோடிக்கு வழிகாட்டுகிறது. இப்படி படுமோசமான சித்தாந்தம் கொண்ட மோடியின் பாஜ மீண்டும் வெற்றி பெறக்கூடாது. பெட்ரோல், டீசலுக்கு வரிபோட்டு ரூ.25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளனர். மோடி வகையறாவை தோற்கடிக்க வேண்டும், இந்தியா கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

The post சிஏஏ சட்டத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும்தான் மோடி வகையறாவை தோற்கடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BAM ,CAA ,Modi ,Marxist ,G. Ramakrishnan ,Thamaraipakkam ,Oothukottai ,DMK ,India Alliance Marxist Party ,Tiruvallur Parliamentary Congress ,Sasikanth Senthil ,Sampath ,DJ Govindarajan ,G.Ramakrishnan ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...