சென்னை: சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை சாய்த்தது. அடுத்து விசாகப்பட்டினம், ஐதராபாத் நகரங்களில் நடந்த ஆட்டங்களில் கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளிடம் வீழ்ந்தது.
இந்த நிலையில், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியுடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. அதற்கு பேட்டிங் வரிசை வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.மொயீன் அலியை தொடக்க வீரராக அனுப்பி, ரச்சின் மற்றும் தோனியை நடுவரிசையில் களமிறக்கினால் ரன் குவிப்புக்கு உதவும். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சென்னைக்கு சாதகமான அம்சம்.
அதே சமயம், ஷ்ரேயாஸ் தலைமையிலான கேகேஆர் தொடர்ச்சியாக ஐதராபாத், பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் உற்சாகமாக உள்ளது. சுனில் நரைனின் அதிரடி தொடக்கம் அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக உள்ளது. சால்ட், ரஸ்ஸல், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், வருண் ஆகியோரும் ரன் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு சென்னை தடை போடுமா, இல்லை சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வியை கேகேஆர் பரிசளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
* இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளதில் சென்னை 19-11 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது).
* அதிகபட்சமாக சென்னை 235, கொல்கத்தா 202 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 114, கொல்கத்தா 108 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* சேப்பாக்கத்தில் மோதிய 10 ஆட்டங்களில் சென்னை 7-3 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
The post ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தாவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.