×

ரூ.4 கோடி பணம் பறிமுதல் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: ரூ.4 கோடி பணம் பறிமுதல் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்னர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ.4 கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக அவரது ஓட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயல். தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்கு செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரனை வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்கிற முயற்சியில் பாஜ ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பதை ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் பாஜவுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்டவேண்டும்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்: திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு தொடர் வண்டியில்கைப்பற்றிய பணம் பாஜ வேட்பாளரும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரனது தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. கைதானவர்கள் விசாரணையில் கொடுத்துள்ள வாக்குமூலம் இதனை உறுதிப்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி கடுமையான குற்றம். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கும் எதிரானது.

சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைகளை சீர்குலைத்து, வாக்காளர் உணர்வுகளை தங்களது தீய செல்வாக்குக்கு அடிபணிய நிர்பந்திக்கும் குற்றச் செயல். இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: பிடிபட்ட 3 பேர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயல். தமிழகத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பாஜ வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும். நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதேபோன்று பாஜ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டும்.

The post ரூ.4 கோடி பணம் பறிமுதல் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Congress ,Communist ,Chennai ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Nellie ,BJP ,Naynar Nagendran ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...