×

மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை நேருவை இழிவுபடுத்த நேதாஜி பெயரை பயன்படுத்துவதா?: வரலாற்றை திரித்து கூறும் கங்கனாவுக்கு கண்டனம்

கொல்கத்தா: மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான போட்டியிடும் நடிகை கங்கனா, நேருவை இழிவுபடுத்த நேதாஜி பெயரை பயன்படுத்துவதா? என்று நேதாஜியின் மருமகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறங்கியுள்ளார். தொடர்ந்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ‘எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

கங்கனாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவாக பாஜக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். கங்கனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக ஆதரவாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னைத் தானே இந்தியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்டதாக சில தரவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உறவுமுறை மருமகன் சந்திர குமார் போஸ் (பாஜகவில் இருந்து விலகியவர்) அளித்த பேட்டியில், ‘வங்காளம் மற்றும் பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார். இது தான் வரலாறு.

இதை யாராலும் மாற்ற முடியாது. கடந்த 1943 அக்டோபர் 21ம் தேதி சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ‘ஆசாத் ஹிந்து’-யின் பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாறு இவ்வாறு இருக்கையில், நேருவை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக நேதாஜியின் ெபயரை பயன்படுத்த முயற்சிப்பது வருந்தத்தக்கது. நேதாஜியை பொருத்தமட்டில், நேரு, காந்தி, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோருடன் கடந்த 1921 முதல் 1941 வரை காங்கிரஸில் இருந்தார். நேதாஜிக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொண்டனர்’ என்றார்.

The post மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை நேருவை இழிவுபடுத்த நேதாஜி பெயரை பயன்படுத்துவதா?: வரலாற்றை திரித்து கூறும் கங்கனாவுக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Netaji ,Nehru ,BJP ,Mandi ,Kangana ,Kolkata ,Mandi seat ,Bollywood ,Kangana Ranaut ,Himachal Pradesh ,
× RELATED திருவெறும்பூர் அருகே தனியார்...