×

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக தீவிரம்: நவீன டிரோன் மூலம் கண்காணிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக நீடிக்கிறது. மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ஊருகுடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கடந்த 3 நாட்களாக உள்ளது. வால்பாறையில் இருந்து வனத்துறையினர், ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை, திருச்சி மாவட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டுக்குள் உள்ள மரங்களில் ஆங்காங்கே 10 அதிநவீன சென்சார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல ஊருகுடி கருவேலங்காட்டிலும் 4 சென்சார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 கூண்டுகள் ஆரோக்கியநாதபுரம் கருவேல காட்டுக்குள் ஆங்காங்கே நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வைக்கப்பட்டது. இதில் ஒரு கூண்டில் கொல்லப்பட்ட ஆடு முழுமையாகவும், மற்ற 2 கூண்டுகளில் ஆட்டிறைச்சியும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று காலை வரை கூண்டுகளுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. இன்று 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி நடந்து வருகிறது. ஆரோக்கியநாதபுரம் அருகே சித்தர்காட்டில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறம் அருகே கடந்த 3ம்ேததி நள்ளிரவு ஆடு ஒன்று கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது.

அந்த பகுதிக்கு கால்நடைத்துறை டாக்டர்கள் சென்று இறந்த ஆட்டை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேபோல் நேற்று காலை மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தும் பகுதியில் வயிறு குதறப்பட்ட நிலையில் ஒரு ஆடு இறந்து கிடந்தது. இதனை பார்வையிட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆட்டை எடுத்து சென்றனர். இதையும் சிறுத்தைதான் வேட்டையாடியதா என்று விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று நீலகிரியிலிருந்து பொம்மன், காளன் ஆகிய 2 பேர் ஆரோக்கியநாதபுரம் வந்தனர். அவர்கள், சிறப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் குடியிருப்பு, கருவேலங்காட்டு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்த குழுவினர் ஏற்கனவே முதுமலை பகுதியில் ஒரு புலியை உயிருடன் பிடித்துள்ளனர். மேலும் தர்மபுரியிலிருந்து நவீன சென்சாருடன் கூடிய தெர்மல் டிரோன் கேமராவை வரவழைத்து அதை வனப்பகுதியில் பறக்கவிட்டு சிறுத்தையை தேடி வருகின்றனர். இந்த டிரோன் காட்டை துல்லியமாக காட்டுகிறது. இதனால் சிறுத்தை விரைவில் சிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 வேட்டை நாய்கள்
வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் சிறுத்தை நடமாடிய ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டு பகுதியில் 8 மோப்ப நாய்கள் மூலம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, முதல் நாளில் பன்றி ஒன்றை சிறுத்தை கொன்ற நிலையில் நேற்றும், இன்றும் இரண்டு ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்த நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. ஒரு ஆடு சிறுத்தை கடித்து இறந்திருக்க 70% வாய்ப்புள்ளதாகவும், மற்றொரு ஆடு நாய்கள் கடித்து இறந்திருக்கிறது என்றும் பிரேத பரிசோதனை அடிப்படையில் உண்மையான தகவல் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு சிறுத்தை நடமாடிய பகுதியில் 8 மோப்ப நாய் மற்றும் வேட்டை நாய்கள் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்ட படம் வெளியிடப்படும் என்றும் சிறுத்தைக்கு வேறு இடத்தில் கூண்டு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

The post மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக தீவிரம்: நவீன டிரோன் மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Mayiladuthura ,Chemmangkulam ,Aarokyanathapuram ,Urukudi ,Valparai ,Anaimalai Tigers ,Mayilada ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு