×

திருத்தணியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது: மக்கள் வீடுகளில் முடங்கினர், சாலைகள் வெறிச்சோடியது

 

திருத்தணி, ஏப். 7: திருத்தணியில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் நகரத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலைகள் சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு சாதாரண அளவை விட குறைவாக இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வெயில் அதிகரித்து வருகின்றது.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் கடந்த 2017ல் 114 டிகிரி வெயில் பதிவானது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோடையில் திருத்தணி பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் படிப்படியாக உயர்ந்து 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகின்றது. இதனால் காலை 10 மணிக்கே வெப்பம் சுட்டெரிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 104.8 டிகிரி வெயில் பதிவானது.

இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி – சித்தூர் மாநில நெடுஞ்சாலைகள் உட்பட மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வெப்பத்திலிருந்து விடபட குளிர்பானம், பழங்கள், மோர், கூழ் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் அடுத்த சில நாட்களுக்கு காலை 11 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அடிக்கடி நீர், மோர், பழங்கள் சாப்பிட வேண்டும் என்றும், குழந்தைகள், முதியோரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

* பிரசாரத்திற்கு ஆள் கிடைக்காமல் அலையும் அரசியல் கட்சிகள்
கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு பிரசாரத்திற்கு ஆட்கள் கிடைக்காததால், பிரசார நேரத்தை காலை 6 மணி முதல் 10 வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை என மாற்றி அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருத்தணியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது: மக்கள் வீடுகளில் முடங்கினர், சாலைகள் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Tirutani ,Thiruthani ,Tiruvallur district ,Tiruthani ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...