×

கீழ்பென்னாத்தூர் அருகே தெருவில் விளையாடியசிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை, ஏப். 7: கீழ்பென்னாத்தூர் அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(25), ரோடு ரோலர் வாகன டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அருகிலுள்ள ஒரு பகுதிக்கு சென்ற கார்த்தி, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியை மிரட்டி, அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான வலிற்று வலியால் துடித்திருக்கிறார். எனவே, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பாதித்திருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், அப்போதைய இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கார்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கார்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும், நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் கார்த்தியை கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கீழ்பென்னாத்தூர் அருகே தெருவில் விளையாடியசிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,Thiruvannamalai ,Tiruvannamalai Pocso Court ,Kilipennathur ,Thiruvannamalai district ,Kolathur ,
× RELATED சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில்...